பயணம்: ‘சூரியனை நோக்கி ஒரு பயணம் 2

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்    July 25, 2016

- மீராபாரதி - தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Continue Reading →