– விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. – வ.ந.கி –
தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் ‘பதிவுகள்’ இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது ‘தொல்காப்பியத்தேன் துளிகள்..’ என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.
கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் ‘தொல்காப்பியம்’ பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம்’ என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின் சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.