எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எந்தவொரு விடயத்தைப் பற்றியும் ஒருவித கருத்திருக்கும். சில கருத்துகள் எம்முடன் ஒத்துப்போகக்கூடியவையாகவிருக்கும். வேறு சில கருத்துகள் முற்றிலும் ஒத்துப்போகாதவையாகவிருக்கும். அதற்காக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவது முட்டாள்தனமானது. அவரது கருத்துகளை அவரது கருத்துகளினூடு எதிர்கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக அவரது கருத்தான இந்திய அமைதி காக்கும் படையினர் பற்றிய கருத்து. அதற்காக நாம் ஆத்திரப்பட வேண்டிய தேவையில்லை. அவரது கூற்று தவறானதென்பதை தர்க்கரீதியாக ஆணித்தரமாக நிரூபிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவதென்பது எதிர்மறையான விளைவுகளையே தரும்.
அதுபோல் அவருக்கு ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் ஒவ்வொருவித கருத்து இருக்கும். அவரது கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது அவர் தன் எழுத்தை அவமதித்து விட்டார் என்பதற்காகத் துள்ளிக்குதிக்க வேண்டியதில்லை. அவரது கருத்தை மாற்றும்படி வற்புறுத்த முடியாது. அது அவரது கருத்து. அது அவரது கருத்துரிமை..
அவர் ஒரு படைப்பைப்பற்றி உயர்த்திக் கூறுவதாலோ அல்லது தாழ்த்திக் கூறுவதாலோ அந்தப் படைப்பின் தரம் குறைந்து போய்விடப்போவதில்லை. உண்மையிலேயே அந்தப் படைப்பு தரமானதாகவிருப்பின் நிச்சயம் காலத்தை வென்று வாழும். மாகவி பாரதியைப்பற்றியே அவர் ஒரு மகாகவி அல்ல என்று வாதிட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களெல்லாரும் காலத்தின் முன் மண்டியிட, இன்றும் பாரதி மாகவியாக உயர்ந்து நிற்கின்றார். இதுபோல் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.