முன்பொருமுறை இது பற்றி முகநூலில் தர்க்கித்தது நினைவுக்கு வருகிறது. தமிழர் தகவல் (கனடா) இதழின் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலரில் வெளியான முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் ‘கனடாவில் தமிழ் இலக்கியம்’ என்னும் கட்டுரையில் ‘”கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ ஆகும். இது 1990இல் வெளிவந்தது.’ என்று குறிப்பிட்டிருந்தது பற்றித் தர்க்கித்தது நினைவுக்கு வருகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியன் ‘காலம்’ செல்வம் போன்றவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அம்முடிவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் கவிஞர் சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ வெளியாவதற்கு முன்னர் 14.01.1987 மங்கை பதிப்பக வெளியீடாக வெளியான ‘மண்ணின் குரல்’ தொகுப்பு எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. அக்கவிதைகளின் விபரங்கள் வருமாறு:
1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு…
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!
இக்கவிதைகள் அனைத்தும் மான்ரியாலிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியானவை. பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய ‘மண்ணின் குரல்’ நாவலும் அதே ‘ புரட்சிப்பாதை’ கையெழுத்துச்சஞ்சிகையில்தான் வெளியானது.