ஒரு முக்கியமான வேண்டுகோள்: வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை
வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.
இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.