முன்னுரை
தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ள அறிஞர்கள் பலராவர். அவர்களுள் காரை.இறையடியான் தனித்திறன் பெற்றவராக விளங்கியவர். எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பணி புரிவதையே முழு நோக்கமாகக் கொண்டு அயராது பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டவர். காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை. இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். 17.11.1935-ல் புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த காரை.இறையடியான் பத்து நூல்களைச் செதுக்கியுள்ள இந்தச் செந்தமிழ்ச் சிற்பியை அவரின் படைப்புகள் வாயிலாக அடையாளம் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
“தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென
ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்’’1
என்று அறிவுநம்பியும்,
“இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாவலர் இறையடியானுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடமுண்டு’’ 2
என்று திருமுருகனும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறத் தகுதி உடையவராய் மதிப்புரைக்கும் இறையடியானின் வரலாறு அறிய வேண்டியுள்ளது.
தமிழமுதமும் வாழ்வியலும்