சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. ‘பாண்டிய நாடே பழம்பதி யென்ன’ என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது. பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.
தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார். இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட நால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.
‘மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.’ – (பொருள். 31)
அந்தணர்:- ‘நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.’ (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள் அறநெறி வாழ்முறையில் ஈடுபடுவர்.