தோற்றுவாய்
தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
1. கலிப்பாவின் இயல்பும் அதன் இசைச்சார் அடிப்படைகளும்
கலிப்பாவின் இயல்பு மற்றும் அதன் இசைச்சார் அடிப்படைகள் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு முதற்கண் ஏனைய மூவகைப்பாக்களோடும் அதனைத் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகிறது. மேற்கூறிய நால்வகைப் பாவடிபவங்களில் வெண்பா தவிர்ந்த ஏனைய மூன்றும்;; தொன்மையான வாய்மொழிப் பாடல்களில் தோற்றங்கொண்ட இயல்பான வளர்ச்சிகளாகக் கருதப்படுவன. இவற்றில் வெண்பாவானது புலவர்களால் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளப்பட்ட பா வடிவமாகும் என்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.1 ஏனைய மூன்றில் ஆசிரியப்பா பண்டைய ‘வெறியாட்டுப் பாடல்களிலிருந்தும் வஞ்சிப்பா, கலிப்பா என்பன முறையே ‘துணங்கை’, ‘குரவை’ ஆகிய கூத்துக்களிற் பயின்ற பாடல்களிலிருந்தும் உருவானவையாகும்.2
இந்நால்வகைப் பாக்களுக்குமுரிய ஓசைகளை யாப்பிலக்கணநூல்கள் எடுத்துப் பேசியுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நான்கும் ‘அகவல்’, ‘துள்ளல்’, ‘தூங்கல்’, ‘செப்பல்’ ஆகிய ஓசைகளைக் கொண்டவை. கலிப்பாவிற்குரிய ‘துள்ளலோசை’ என்பதற்குப் தொல்காப்பிய, உரைகாரரான பேராசிரியர்,
“வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்;படுமாற்றால் துள்ளச் செல்லும் ஓர் ஓசை”3