பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை’ என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்’ என்று ‘ம’வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் ‘அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை’ என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.
யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது.