அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் ‘டொராண்டோ’ வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் ‘வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்’ என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.
அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.