பேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 – 10 – 2016) ஒரு வருடம் கழிந்துவிட்டது..! அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் – பொ. வேல்சாமி – து. மூர்த்தி – இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ”பஞ்சமர்” நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் “கோவிந்தன்” நாவல் அச்சாகி வெளிவந்தது. “கோவிந்தன்” நாவல் வெளியீட்டு விழா – அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் – வேலணை – வடமராச்சி – திருமலை – கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.