மாஸ்டர் சிவலிங்கம் தொடர்பாக கடந்த 22 ஆம் அங்கத்தில் எழுதியிருந்த குறிப்புகளில் 1964 ஆம் ஆண்டு யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து வருகைதந்த மாணவர்களின் வள்ளி திருமணம் கூத்து அரங்காற்றுகையை ரசித்த தகவலை எழுதியிருந்தேன். அதனைப்படித்திருக்கும் தம்பிராஜா பவானந்தராஜா என்பவர் எழுதியிருந்த குறுஞ்செய்தியை பதிவுகள் இணைய இதழ் நடத்தும் நண்பர் கிரிதரன் எனக்கு அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட வள்ளிதிருமணம் கூத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர்தான் பவானந்தராஜாவின் தந்தையார் அண்ணாவியார் தம்பிராஜா. 1965 இல் யாழ். மகாஜனாக்கல்லூரியில் நடந்த அகில இலங்கை ரீதியிலான போட்டியிலும் அண்ணாவியார் தம்பிராஜாவின் குருக்கேத்திரன் போர் என்ற கூத்து முதல் பரிசுபெற்றதாகவும் , பேராசிரியர் மௌனகுரு அவர்களும் தமது தந்தையாரிடம் கூத்து பயின்ற மாணவர்களில் ஒருவர் எனவும் அவரது செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 53 வருடங்களுக்கு முன்னர் பார்த்து ரசித்த வள்ளிதிருமணம் கூத்து எனக்கு நினைவிலிருக்கிறது. அதன் அண்ணாவியாரின் பெயர் மறந்துவிட்டது. நினைவுபடுத்திய அண்ணாவியார் மகனுக்கு நன்றி.
கடந்த காலங்களை நினைவுபடுத்தினால் இதுபோன்ற பல அரிய தகவல்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதற்கு முன்னர் தொண்டமனாறில் வசிக்கும் குந்தவை என்ற படைப்பாளியைப்பற்றி எழுதியிருந்தபோதும், கனடாவிலிருந்து நகுலசிகாமணி என்ற அன்பர் தொடர்புகொண்டு, வல்வெட்டித்துறை ஆவணக்காப்பகத்தில் பேணப்படும் பெரிய நங்கூரத்தை வழங்கியவர் குந்தவைதான் எனவும் அவரது மூதாதையர்கள் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு கப்பலோட்டிய தமிழர்கள் என்ற தகவலையும் அறியத்தந்திருந்தார். அண்மையில் வெளியாகியிருக்கும் எனது சொல்லவேண்டிய கதைகள் நூலில் குந்தவை பற்றிய ( நாற்சார் வீடு என்ற அங்கத்தில்) கதையில் நகுலசிகாமணியின் தகவலையும் சேர்த்துக்கொண்டேன்.
அன்று மட்டக்களப்பில் நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், என்னை ஊடகப்பள்ளியில் பணியாற்றும் ஏற்கனவே எனக்கு நன்கு தெரிந்த பத்திரிகையாளர் அருள்சங்கீத்திடம் அழைத்துச்சென்றார். இவர் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலாரத்தினத்தின் பேரனாவார். இருக்கிறம் என்ற இதழின் ஆசிரியர் குழுவிலிருந்தவர். 2011 மாநாட்டில்தான் இவர் எனக்கு அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான இருக்கிறம் இதழ்களின் பிரதிகளை எடுத்துவந்து மாநாட்டின் பேராளர்களுக்கு இலவசமாகவே வழங்கினார். அரசியல் சமூக, கலை, இலக்கிய விமர்சன இதழாக வெளியான இருக்கிறம் இணைய இதழாகவும் வெளியாகியிருக்கிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அருள்சங்கீத் அந்த ஊடகப்பள்ளியிலும் விரிவுரையாற்றுகிறார். நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற ஊடகப்பள்ளிகள் இருக்கவில்லை. இலங்கை மன்றக்கல்லூரிகளில் என்றாவது ஒரு நாள் ஊடகத்துறை சார்ந்த பயிலரங்குகள் மாத்திரமே நடைபெறும். தற்காலத்தில் நவீன தொழில்நுட்பம் சார்ந்து ஊடகத்துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்திருப்பதனால், ஊருக்கு ஊர் ஊடகப்பள்ளிகள் இயங்குகின்றன. ஒளிப்படத்துறையிலும் டிஜிட்டல் முறை வந்திருப்பதனால், இளம்தலைமுறையினர் இவற்றில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.