– 30.10.2017 அன்று ‘ரொறன்ரோ’ தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் மூல வடிவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை மையமாக வைத்துத்தான் அவ்வுரையினை ஆற்றியிருந்தேன். இருந்தாலும் உரையாற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகக் கூற வேண்டிய யாவற்றையும் கூறினேனா இல்லையா என்ற சந்தேகமிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு பதிவிடுகின்றேன். – வ.ந.கி –
இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம். மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு எழுத்தாளர் யூமா வாசுகியால் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்) ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.
‘கசாக்கின் இதிகாசம்’ என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள். தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:
Continue Reading →