“இலங்கையின் தமிழ் நாடக உலகில் மறக்கமுடியாத ஒரு பேசும் பொருளாக மறைந்த லடீஸ் வீரமணி திகழ்கிறார். அவரின் படைப்புகளையும் ஆளுமைகளையும் முறையாக ஆய்வு ரீதியாகவும் பதிவு செய்தால் தமிழ் நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய வீரியமிக்க பணி வெளிப்படும். அவர் தமிழ் நாடக மேடைக்கு அளித்த பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கும் அந்தனி ஜீவா சுறுசுறுப்பானவர் காத்திரமான தகவல்களை தேடி அவற்றை மக்களிடையே வெளிக்கொணர்வதில் மிகவும் சமர்த்தர். சில நேரங்களில் அவற்றை ஆத்திரமாகவும் வெளிப்படுத்த அஞ்சாதவர்”.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வாராந்தம் புதன்கிழமைகளில் நடத்தும் அறிவோர் ஒன்றுகூடலில் ‘தமிழ் நாடக மேடைக்கு லடீஸ் வீரமணியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அந்தனிஜீவா உரையாற்றிய கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசும் போதே இவ்வாறு கூறினார்.
கடந்த மே மாதம் 26ம் திகதி இந் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றவர்கள் தமிழ் நாடகம் பற்றிய முழுக்கவனம் செலுத்தியதுடன் வந்தாறுமுல்லை செல்லையா போன்ற நாட்டுக்கூத்து கலைஞர்களையும் அவர்களின் கூத்துக்களையும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வந்து அவற்றை மேடை ஏற்றி அவர்களின் திறமைகளை வெளிகொணந்தவர். பின்னர் வந்த பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் அவரின் செயல்பாடு களை பின் பற்றினாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தனது உரையில் மேலும் தெரிவித்தார் சபாஜெயராஜா.
அந்தனிஜீவா உரையாற்றுகையில் தலைநகரில் தமிழ் நாடக மேடையில் விஸ்வரூபதரிசனம் தந்தவர் நடிகர் லடீஸ் வீரமணி என்றார்.
“தலைநகரில் தமிழ் நாடக வரலாறு தமிழ் நாடக மேடையின் முன்னோடி யும் முதல்வருமான இராஜேந்திரம் மாஸ்டர் அவர்களிடமிருந்தே தொடங்குகிறது.
இந்தியாவில் தூத்துகுடியிலிருந்து வந்து கொழும்பு மத்தி ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் குடியேறிய கத்தோலிக்க குடும்பத்தில் கலையார்வமிக்க இளைஞர் ஒருவருக்கு இசைக்கருவிகளை வாசிப்பதிலும், கத்தோலிக்கக் கூத்துக்களிலும் ஈடுபாடு இருந்தது. ஈழத்து தமிழ் நாடக வரலாறு கலையரசு சொர்ணலிங்கத்துடன் தொடங்குவதைப் போல் கொழும்பு தமிழ் நாடகமேடையின் வரலாறு இராஜேந்திரம் மாஸ்டர் என்ற கலையார்வமிக்க இளைஞனுடனே தொடங்குகிறது. டவர் ஹோல் நாடக அரங்கின் முன்னோடிகளான ஜோன் டி சில்வா, டொன் பாஸ்ரியான், சார்ள்டயஸ் ஆகியோரின் நாடகங்களும் கொழும்பில் வாழ்ந்த இராஜேந்திரன் மாஸ்டர் என்ற கலைஞரை ஊக்குவித்தன.
ஜோன் டி சில்வா என்ற கலைஞரு டன் தொடர்பு கொண்டிருந்த இராஜேந் திரம் மாஸ்டர், அவரோடிருந்த டபிள்யூ. சதாசிவத்தின் தூண்டுதலால், ஜோன் டி சில்வா அவரது மகன் பீட்டர் சில்வா ஆகியோரின் நாடக மேடை ஏற்றத் திற்குத் திரைக்குப் பின்னால் இருந்து பல பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி யுள்ளார். இதனால் நாடகங்களை அனுபவ ரீதியாக கற்று அறிந்து கொண்டவர்.