எழுத்தாளர் புதுமைலோலன் அவர்களைச் சில தடவைகள் யாழ் பிரதான சந்தைக்கண்மையிலுள்ள அவரது புத்தகக்கடையான ‘அன்பு புத்தகசாலை’யில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அப்பொழுது நான் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருந்த சிறுவன. மாணவன். எழத்தில் ஆர்வம் மிகுந்து குழந்தைகளுக்கான சஞ்சிகைள், பத்திரிகைகளில் வெளியாகும் சிறுவர் பகுதிகளுக்கு ஆக்கங்களை அனுப்பத் தொடங்கியிருந்தேன். புதுமைலோலன் அவர்கள் எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணன் என்று அக்கடையில் பணிபுரிந்த இளைஞர் (பெயர் மறந்துவிட்டது) கூறியிருந்தார். அவ்விளைஞரே எனக்கு அக்காலகட்டத்தில் தன்னிடமிருந்த மார்க்சிக் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தந்தவர். எழுத்தாளர் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான நாவல்.
அண்மையில் ‘நூலகத்’தில் புதுமைலோலன் எழுதிய ‘தடுப்புக் காவலில் நாம்’ என்னும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல். 1961இல் யாழ் கச்சேரிக்கு முன்பாகத் தமிழரசுக் கட்சியினர் ‘சத்தியாக்கிரக’மிருந்தனர், பெண்களும் அதில் பங்குபற்றியிருந்தனர். அதனை அன்றிருந்த ஶ்ரீமா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசு படைபலம் கொண்டு அடக்கியது. தமிழ் அரசியல்வாதிகளுட்பட ஏனைய சத்தியாக்கிரகிகள் யாவரும் தாக்குதல்களுள்ளாகிக் கைது செய்யப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களில் எழுத்தாளர் புதுமைலோலனும் ஒருவர். அவர் 18.4.1961 தொடக்கம் 26.7.1961 வரை பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தனது தடுப்புக் காவலிலிருந்த சமயம் தம் அனுபவங்களைத் தன் மகள் அன்பரசிக்குக் கடிதங்களாக எழுதினார். அக்கடிதங்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அக்கடிதங்களின் தொகுப்பே மேற்படி நூலான் ‘தடுப்புக் காவலில் நாம்’.