மகாகவி பாரதியார் ‘சுயசரிதை’ என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.” என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். ‘பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?
இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் ‘உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்’ என்று கூறும் அவர், தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்’ என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா’ என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.