தொல்காப்பியத் திணைகள் துறைகள் தூவும் தனிச்சிறப்பும் திகைப்பும்

தொல்காப்பியம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் தொல்காப்பியம் என்ற நூலை யாத்துத் தந்தனர். இந்நூல் தொன்மை, செப்பம், வளம், செழுமை, வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் அரிய இலக்கண இலக்கிய உயிர் நூலாய் எம் மத்தியில் பவனி வருகின்றது. ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். இன்னும், ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசன் கூறியுள்ளார். இனி, பொருளதிகாரத்தில,; அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய  இரு திணைகள் பற்றித் தொல்காப்பியம் கூறுவதையும் காண்போம்.
அகத்திணையியல்- பழந்தமிழர் வாழ்வியலை அகம் எனவும், புறம் எனவும் வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டினர். அகம் இன்ப ஒழுக்கத்தின் இணைந்த இல்வாழ்வு பற்றியதாகும். அதை மேலும் ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் என மூன்று பகுதிகளாகக் காட்டி, அவற்றை முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனக் கூறி, அவற்றை ஒருமித்து ஏழு திணைகளாக ஆன்றோர் எடுத்துக் காட்டுவர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பின்வருமாறு அமைத்துள்ளார்.

‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் 
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள் 01)

மேற்கூறிய அன்புடைக் காமம், அன்பின் ஐந்திணை என்பன ஐவகை நெறி பற்றிய கூற்றாகும். அவை ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றின் சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்றழைப்பர். இதிற் காட்டிய ஐந்திணைகளுக்கும், ஐவகையான நிலங்களை ஒதுக்கியமை கண்டீர். ஆனால் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலங்கள் ஒதுக்கப்படாதமையும் காண்பீர்.

Continue Reading →