வானதி’ திருநாவுக்கரசு மறைவு!

வானதி' திருநாவுக்கரசு மறைவு!தமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் கொடும்பாளூர் இளவரசியும், இராஜராஜனின் மனைவியுமான வானதி என்னும் பாத்திரத்தின் மீது கொண்ட பேரபிமானத்தினால் தனது பதிப்பகத்துக்கு ‘வானதி’ என்று பெயரிட்டவர் ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்கள்.  பல்துறைகளிலும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த படைப்புகளினூடுதான் எம் போன்றவர்களின் வாசிப்பும் வளர்ந்தது. நூல்களை மிகவும் நேர்த்தியாக வெளியிடுவதை ஒரு தவமாகச்செய்தவர் திருநாவுக்கரசு. அவரது மறைவு தமிழ்ப்பதிப்பகத்துறைக்கு முக்கியமானதோரிழப்பே.

Continue Reading →

பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா

-பேராசிரியர் கோபன் மகாதேவா -பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில்  அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.

டென்மார்க்கில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் எமக்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் மூலமும் அவரது சமகாலப் பணிகளையும் அறிய முடிந்தது.

தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அனுமதியை சிறிமாவிடம் வாதிட்டுப் பெற்றார் என்பதை விளக்குவதாக  டென்மார்க்கில் நடைபெற்ற கலைவிழாவில் அவரது உரை அமைந்திருந்தது. பின்னர் நான் அவரிடம் இது தொடர்பாக ஞானம் சஞ்சிகையில் வெளியிடுவதற்கென ஒரு நேர்காணலையும் பெற்றுக்கொண்டேன்.

Continue Reading →

ஆய்வு: பாரதியின் பெண்ணுரிமைக் கவிதைகள்!

-பேராசிரியர் கோபன் மகாதேவா -- பேராசிரியர் கோபன் மகாதேவா | திருமதி சீதாதேவி மகாதேவா -(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே.  பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம்.  — கூட்டாசிரியர்  கோ-ம.)

சுப்பிரமணிய பாரதியார் பெண் உரிமையை ஆதரித்துப் பாடி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலவர்களுள் ஒரு முன்னோடி எனலாம்.  இன்றிருந்து கிட்டத் தட்ட ஒருநூற்றாண்டு காலத்தின் முன் எழுதப்பட்ட பாரதியாரின் பெண்ணுரிமைப் பாடல்களில்: மனைத் தலைவிக்கு வாழ்த்து, பெண்விடுதலை, பெண்விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை, எனும் பாரதியின் தனிப் பட்ட, குறுகிய நேரடிக் கவிதைகளை நாம் விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, எனும் நீண்ட கதைக் கவிதைகளிலும் அன்று பெண்கள், ஆண் ஆதிக்கத்தால் பட்டு வந்த பிரச்சினைகனை மறைமுகமாகப் பாரதியார் விளக்கி இருக்கின்றார்.  மேலும் அவரின் கண்ணம்மா கவிதைகள் மூன்றிலும், மகாகாளி, முத்துமாரி, கோமதி, மகாசக்தி, எங்கள் தாய், தமிழ்த் தாய், பிஜித்தீவிலே  ஹிந்து ஸ்திரிகள், தாய் மாண்பு, அம்மாக் கண்ணுப் பாட்டு, வள்ளிப்பாட்டு, ராதைப்பாட்டு, கண்ணம்மா என் குழந்தை, என்னும் கவிதைகளிலும், பெண்மைக் குணங்களை மனதாரப் போற்றி இருக்கின்றார். மனப் பெண் என்னும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் பெண்களின் மாறிடும் மனோநிலை பற்றி அவர் கிண்டல் செய்திருக்கின்றார். இந்தக் கட்டுரையில், பெண் விடுதலைக் கும்மி எனும் ஒரேயொரு கவிதையை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து, விளக்கி, பாரதியாரின் பெண்ணுரிமைத் தொண்டினை ஆராய்ந்து மதிப்பிடுகிறோம். முதலில், இதோ, சந்தம் பிரிக்கப் பட்ட அக் கும்மிக் கவிதை:

Continue Reading →