– கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-
‘காவியத்துக்கு ஒரு மஹாகவி’ என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் ‘கண்மணியாள் காதை’ காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் ‘சடங்கு’ என்று ‘விவேகி’யில் எழுதிய தனது குறுங்காவியத்தின் நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் ‘கண்மணியாள் காதை’ . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் ‘கண்மணியாள் காதை’ தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி ‘ஈழநாடு’ பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த ‘தேனி’யின் விமர்சனம் ‘காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி’ என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்படி ‘கண்மணியாள் காதை’யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் ‘கண்மணி’, ‘செல்லையன்’ ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான ‘காரிருள்’ காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும். அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:
“யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!” எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு –
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!
Continue Reading →