தமிழர் பண்பாடு உலகில் உள்ள ஏனைய பண்பாடுகளோடு ஒப்புநோக்கும்போது காலத்தால் முந்தியது எனக்கொள்ள பல்வேறு சான்றுகளை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்து எனக்கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப்படுகின்றது. அதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவ தெய்வ வழிபாடு, கொம்புகளை உடைய மாட்டின் முகத்தினைக் கொண்ட நந்தி ஈஸ்வரர் வழிபாடு என்பன நடைமுறையில் இருந்துள்ளன என்பனவற்றிற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சங்க காலத்தை கி.மு. 2000 ஆண்டுகள் தொடக்கம் கி.பி. 600 ஆண்டுகள் வரையும் எனக் கணிப்பீடு செய்வோரும். அதற்கு முந்திய நெடுங்காத்திற்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்ற கருத்தினைக் கூறுவோரும் உள்ளன. முச்சங்கம் எனப்படும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன இருந்துள்ளன. கடல்கோள் கொண்ட தென்மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் இச்சங்கள் இருந்துள்ளன. இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே தலைச்சங்கம் எனப்படும் முதற்சங்கம் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நிறுவுகின்றனர் ஆய்வாளர்கள். அவற்றில் ஆயிரக்கணக்கான புலவர்கள் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் பல்வேறு தெய்வங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. புத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களில் இறைவணக்கம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று தொல்காப்பியம் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. மக்கள் வாழும் இயற்கைக்கேற்ப அவர்களின்வாழ்வியல் மாறுபட்டுக் காணப்பட்டதை தங்கள் பாடல்களின் மூலம் புலவர்கள் கையாண்டுள்ளனர். அக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்னும் ஐவகை இயற்கைப் பிரிவுகள் இருந்தன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். முல்லை காடும் காடு சார்ந்த பகுதியாகும். மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. பாலை, மணலும் மணல் சார்ந்த நிலப்பரப்பு. அந்தந்த நிலத்து மக்கள் அவரவருக்குரிய தெய்வங்களை வழிபாடு செய்து வந்தனர் என்பதனை பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகவும் அவற்றிற்கு இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியம் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமானும், மருதநிலத்துக் கடவுளாக இந்திரனும், நெய்தலில் வருணனையும், பாலை நிலத்தில் கொற்றவையையும், முல்லை நிலத்தில் திருமால் எனப்படும் மாயோனையும் வழிபாடு செய்யப்பட்டுள்ளமை சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு பயின்று வந்துள்ளமையை காணமுடிகின்றது.