அண்மையில் பரதன் நவரத்தினம் தனது முகநூல் பதிவாக ‘மரணதேவன்’ என்னும் சிறு கதையொன்றினைப் பதிவு செய்திருந்தார். டொரான்டோ பாதாள இரயிலில் பயணிக்குமோர் இளைஞனை, அந்த இரயில் முன் விழுந்த மரணித்த மானுடர் ஒருவரின் நிலை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைப்பற்றிய சிறியதொரு விபரிப்பே அக்கதை. கதை சிறியதாக இருந்தாலும் வாசிப்பவரை ஈர்க்கும் தன்மை மிக்கது. மழை பெய்யும் இரவொன்றில் , கடையொன்றில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர், வீடு திரும்புவதை விபரிக்கும் கதை. அவ்விதம் இரவில் தனியே திரும்பும்போது , நகரத்து இரவில் ஒருவர் அடையும் பயப்பிராந்திகளையும் அழகாக விபரித்திருக்கின்றார். வாசிப்பவரையும் அந்தப்பயப்பிராந்தி பீடித்து விடுவதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.
மேலும் நல்ல எழுத்து நடை. கூடவே சூழலை அவதானிக்கும் ஆற்றலுடன் கூடிய சம்பவ விபரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து நல்லதொரு சிறுகதையாக மலர்ந்திருக்கின்றது. இன்னுமொன்று நகரத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள எழுத்து. பகலில் வெறும் கட்டடங்களும், விரையும் மனிதர்களுமாகக்காட்சியளிக்கும் நகரின் இரவு வித்தியாசமானது. விபரிக்கும் வரிகள் சிறக்கின்றன.
‘டிராகுலா’த்திரைப்படங்களில் அல்லது அது போன்ற திகிலூட்டும் திரைப்படங்களில் ஒவ்வொரு சிறு சிறு சம்பவத்தையும் பார்வையாளரின் அச்சத்தினைப் படிப்படியாக அதிகரிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது போன்ற எழுத்துப்பாணியினைப் பரதன் இக்கதையில் கையாண்டிருக்கின்றார்.
எழுத்தில் சிறப்புண்டு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு பதிவுக்காக அவரது அக்கதையினை இப்பதிவின் இறுதியில் பதிவு செய்திருக்கின்றேன். நீங்களும் ஒருமுறை வாசித்து அந்த இரவில் அவரது கதையின் நாயகன் அடைந்த உணர்வினை நீங்களும் அடையுங்கள்.