‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்;க”
தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 1955 ஆம் ஆண்டு பிறந்த குணசேகரன், நாட்டுப்புற பாடல்கள் ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர். காலம் காலமாக நீடித்த முன்னைய மரபார்ந்த அரங்கவியலுக்கு மாற்றாக தலித் அரங்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர் குணசேகரன். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் கலை இலக்கிய அமைப்புகளின் மாநாடுகளில் இவருடைய நிகழ்ச்சிகளின் அரங்காற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.
தன்னானே என்னும் பெயரில் நாட்டுப்புறக்கலைக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் தலித் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய சமூகப்போராளி. நாட்டுப்புறக்கலைகள் தொடர்பாக ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த குணசேகரன் எழுதிய ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. புதுவை அரசின் கலை மாமணி விருதும் பெற்றவர்
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் முன்னெடுத்தபோது தங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது ‘மனுசங்கடா’ ஒலிநாடாவுக்கும் ‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. ” என்று முன்னாள் சட்டசபை உறுப்பினரும் எழுத்தாளரும் நிறப்பிரிகை ஆசிரியருமான தோழர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.