‘
யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.