அப்பாடா! ஒரு வழியாக எனது ‘குடிவரவாளன்’ நாவலை இயலுமானவரையில் பிழை திருத்தி ஓவியா பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். பிழை திருத்துவது போல் மிகவும் சிரமமான காரியம் வேறொன்றுமில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிழை தப்பிப்பிழைத்து விடும் அதிசயத்தை என்னவென்பது. இந்நூலைத் தமிழகத்தில் வெளியிடும் ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகப்புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழ் அகதியொருவன் எவ்விதம் சட்டவிரோதக்குடிவரவாளனாக நியூயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் இருப்பினை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கின்றான் என்பதை விபரிக்கும் நாவல் இது.
நாவலின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் 83 இனக்கலவர நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் அத்தியாயங்களாக இருந்தபோதிலும், நாவல் முழுவதும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ,மண்ணையே கதைக்களமாகக்கொண்டு, அங்குள்ள பல்வகை மாந்தர்களைப்பாத்திரங்களாகவும் கொண்டு நடைபோடுகிறது. அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு, என் மகள் தமயந்தியால் சரி, பிழை பார்க்கப்பட்டு வெளியிடுவதற்குத் தயார் நிலையிலுள்ளது. அதனை மின்னூல் வடிவில் என் வலைப்பதிவான http://vngiritharan23.wordpress.com தளத்தில் வாசிக்கலாம். காலம், நேரம் கூடி வரின் அம்மொழிபெயர்ப்பும் நூலுருப்பெறும்.
விரைவில் ‘குடிவரவாளன்’ தமிழகத்தில் வெளிவரும். நூல் வெளிவந்ததும் நூல் பற்றிய மேலதிகத்தகவல்களை அறியத்தருவேன். ஓவியா பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி!