இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் நகரம், கிராமம் உட்பட பட்டிதொட்டியெங்கும் பிரசித்தமான பாடல்தான் ” சின்ன மாமியே உன் சின்னமகளெங்கே ? பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ? “தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த கலைஞர் கமலநாதன் இயற்றிய அந்தப்பாடல், தற்பொழுது அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பிரபல பாடகர் நித்தி கனகரத்தினத்தால் பிரசித்தி பெற்றது. ஒரு கால கட்டத்தில் இளைஞர்களை பெரிதும் வசீகரித்த இந்தப்பாடலை இயற்றிய கமலநாதன் நேற்று (26-01-2016) வடமராட்சி – வதிரியில் அக்கினியுடன் சங்கமமானார்.
சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த கமலநாதன், வடமராட்சியில் சிறந்த கல்விப்பாரம்பரியத்தின் பின்னணியிலும் கலை, இலக்கிய ஊடகத்துறை செயற்பாட்டாளர்களின் பின்னணியிலும் வாழ்ந்தவர். சிறந்த உதைபந்தாட்ட வீரர். பின்னர் உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு மத்தியஸ்தராகவும் விளங்கியவர். பாடல் புனையும் ஆற்றலும் இவருக்கிருந்தமையால் சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதிய பாடல்தான் சின்ன மாமியே. எனினும் அதனை மேடைகள்தோறும் நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால், கமலநாதனின் பெயர் வெளியில் தெரியவில்லை. எனினும் இப்பாடலின் ரிஷிமூலத்தை காலம் கடந்து எழுத்தாளர் வதிரி சி. ரவீந்திரன் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார். இலங்கை பத்திரிகைகளில் இச்செய்தி பகிரங்கமானபொழுது தன்னடக்கம் பேணியவர் கமலநாதன்.
ஒரு காலகட்டத்தில், ஏ.ஈ. மனோகரன், நித்தி கனகரத்தினம், இராமச்சந்திரன், முத்தழகு, அமுதன் அண்ணாமலை முதலான பலரால் பொப்பிசைப்பாடல்கள் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபல்யம் பெற்றன. அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியில் எச்.ஆர். ஜோதிபால, பிரடீ சில்வா, ஷெல்டன் பெரேரா, எம்.எஸ். பெர்னாண்டோ, மில்டன் மல்லவராச்சி முதலானோரும் பிரபல்யம் பெற்றிருந்தனர்.
சமூக சீர்திருத்தம் தொடர்பாகவும் மனிதர்கள், மற்றும் மாறிவரும் உலகத்தின் நவநாகரீகம் பற்றிய அங்கதச் செய்திகளும் இந்தப்பொப்பிசைப்பாடல்களில் தொனிக்கும். இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமலேயே குறைந்தளவு வசதிகளுடன் பொப் பாடல்களின் ஊடாக அவற்றை இயற்றியவர்களின் கருத்துக்களை நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும் நளினமான ஆடல்கள் மூலமும் இந்தப் பாடகர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றனர். ஆனால், கேட்டு ரசித்து தாமும் பாடும் மக்களுக்கோ இந்தப்பாடல்களை இயற்றியவர் யார் ? என்பது தெரியாது. அவ்வாறே கமலநாதனும் கிணற்றுள் விளக்காக வாழ்ந்தார்.