இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015

இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார். 

தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.  கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000.  இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார்.  இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும். இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய  இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி  திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும்,  தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 141 : பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி….

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.மகாகவி பாரதியார் ‘சுயசரிதை’ என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.” என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். ‘பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் ‘உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்’ என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்’ என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா’ என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

Continue Reading →

‘ஞயம் பட வரை’ கட்டுரைப்போட்டி – ஒரு நினைவூட்டல்

'ஞயம் பட வரை' கட்டுரைப்போட்டி  - ஒரு நினைவூட்டல்

அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.
உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
ஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.
போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.

Continue Reading →

நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் ‘தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!’

நூல் மதிப்புரை: முனைவர் துரை குணசேகரனின் 'தமிழ்ச்சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு!'“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”

என்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்

`        மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடைய அறன்(குறள் 742)

என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது.

Continue Reading →

பத்தி 3: இணையவெளியில் படித்தவை

விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)

இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை நவீனக் கதையில் மையப்படுத்தி எழுதும் முறை நமது பண்பாடு பற்றிய ஒரு புதிய கோணத்திலான பார்வையை நமக்கு அளிப்பது.

புதுமைப்பித்தனின் சாப விமோசனம் தமிழில் மிகவும் விவாதிக்கப்பட்ட சிறுகதை. அதை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் வழி வாசிக்கலாம்— சாபவிமோசனம் இணைப்பு.

ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் – சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது. இதுவே புதுமைப்பித்தனின் சிறுகதைச் சுருக்கம்.

ராமாயணத்தில் (பக்தியுடன்) வாசிப்பவர்களால் அனேகமாக கவனிக்கப் படாமற் போன ஒரு கதாபாத்திரம் ஊர்மிளை (லட்சுமணனின் மனைவி). மைதிலி சரண் குப்த என்னும் செவ்விலக்கிய கால ஹிந்திக் கவிஞர் ‘ஊர்மிளா கா விரஹ்’ என்னும் காவியம் அது வெளியான செவ்விலக்கிய காலத்தில் பக்திப் பரவசமாகாமல் ராமாயணத்தை அணுகிய முன்னோட்டமான முயற்சி என்று நாம் கருதலாம். இந்த நூல் அடிப்படையில் ‘ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆய்வு நூலை நான் எழுதத் தூண்டு கோலாக அமைந்தது. ராமாயணத்தில் சீதை நடத்தப்பட்ட விதம் பெரிதும் விவாதத்துக்கு உள்ளாகிறது. அந்த நூலில் நான் எல்லா கதாபாத்திரங்களின் முரணான நிலைப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தேன்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு…

‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை ‘ஆய்வு’ என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்…

Continue Reading →

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன்.

அக்காலகட்டத்தில் குமுதத்தில் வெளியான ஓரிரு   அத்தியாயங்களை (பாலூர்ப் பெருந்துறையில் இளைய பல்லவனின் வீர சாகசங்களை விபரிக்கும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் கூடிய)   வாசித்துவிட்டு வாசிப்பதற்காகத் தேடி அலைந்திருக்கின்றேன். அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, ‘பைண்டு’ செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் ‘கடல்புறா’வினை என்னால் மறக்க முடியாது.

நான் ஆறாம் வகுப்பிலிருந்தே கல்கி, விகடனில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஆனால் குமுதம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கியது வவுனியா மகாவித்தியாலயத்தில் அக்காலத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் பால்யகாலத்து நண்பர் மூலம்தான். அவரது வீட்டில் அக்காலகட்டத்தில் குமுதம் சஞ்சிகையினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் அதில் வெளியான பி.வி.ஆரின் ‘கூந்தலிலே ஒரு மலர்’, சாண்டில்யனின் ‘ராஜமுத்திரை’, சித்திரக்கதையான ‘கடற்கன்னி’ ஆகியவற்றைப் பற்றிக்கூறியிருந்ததாக ஞாபகம். அல்லது அவை வெளிவந்த குமுதம் சஞ்சிகையினை எனக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதன்பின்னரே குமுதத்தின்பால் என் கவனம் திரும்பியது. அதன் பின்னர் ரிஷாங்கனை நான் சந்திக்கவில்லை. அவர் தற்போது மருத்துவராகப் பணிபுரிவதாகக்கேள்விப்படுகின்றேன். மருத்துவரான என் கடைசித்தங்கை அவரது பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஒருமுறை அவரைச்சந்தித்திருப்பதாகக்கூறியிருக்கின்றார். முகநூல் மூலம் மீண்டும் அறிமுகமான என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான சண்முகராஜாவும் ரிஷாங்கன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

Continue Reading →

ஆய்வு: பாரதி பாடிய யேசு கிறிஸ்து

பாரதி பாடிய யேசு கிறிஸ்துஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன.அவற்றில் மிக சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னைச் சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர், ஒருபோதும் தன்னைப் பிற மத துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டியுள்ளார். சமயச் சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

பாரதியார் கவிதைகள் என்னும் பெருந்தொகுதியில் விநாயகர் நான்மணி மாலை முதலாகவும், தோத்திரப் பாடல்கள் இரண்டாவதாகவும், வேதந்தப் பாடல்கள் மூன்றாவதாகவும் காணப்படுகின்றன. இம்மூன்றாம் பகுதியாக உள்ள வேதாந்தப் பாடல்களில் முப்பது தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இவை யாவும் 1930ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றன. இதிலுள்ள சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்தவையாகும். இம்முப்பது கவிதைகளில் ஒன்பதாவது கவிதையாகக் காணக்கிடைப்பதுதான் இந்த யேசு கிரிஸ்து என்னும் கவிதையாகும். இதில் யேசுவைப் பற்றிப் பாரதியார் குறிப்பிடும் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

Continue Reading →

மகாபாரத பாண்டவர் சபையில் அடித்துக்கொல்லப்பட்ட “துணிச்சலான ரிஷி” சார்வாகன் பெயரை புனைபெயராக்கிய இலக்கிய ஆளுமை மறைந்தார். தொழுநோயாளருக்கு சிகிச்சையளித்த மனிதநேய மருத்துவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!சமகாலத்தில்  மறைந்தவர்களின்  அறையினுள்தான்  வாழ்கின்றேனா….?  இந்தக்கேள்வியை  எனக்கு  நானே   கடந்த  ஆண்டின்  தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே  இருக்கின்றேன்.  ஆனால்,  இந்தக்கேள்விக்கு  பதில் இல்லை.   இந்த  ஆண்டின்  இறுதியும்  மறைந்தவர்களின்  அறையினுள்தான் என்னை  முடக்கிப்போட்டிருக்கிறது.   எனது  அறையிலிருக்கும்  கணினியை திறக்கும்பொழுதே   பதட்டம்தான்  வருகிறது.

துயில்  மறைந்து  பல   மாதங்கள்.   துயரம்  கப்பிய  சிந்தனைகளும்  அப்படியே  பல  மாதங்களாக  ஓடுகிறது.   முற்றுப்புள்ளியில்லாத  நீண்ட வசனங்களையே  எனது  அறையிலிருந்து  எழுதுகின்றேன்.   பழகியவர்கள் தெரிந்தவர்கள்  இலக்கியப்பாதையில்  இணைந்து  வந்தவர்கள் ஒவ்வொருவராக  விடைகொடுக்கும்பொழுதும்  அவர்களின்  படங்கள் நிரம்பியிருக்கும்   எனது  கணினியை  தினமும்  பார்க்கும்பொழுதும் நீண்டபொழுதுகள்   தினமும்  செலவிடும்  இந்த  அறை   எனக்கு மறைந்தவர்களின்   அறையாகவும்,   அவர்கள்  என்னோடு  பேசிக்கொண்டிருக்கும்    அறையாகவும்  மாறிவிட்டது.

கடந்த  20  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   அவுஸ்திரேலியா  மெல்பனில் எமது  அருமை   இலக்கியச்சகோதரி  அருண். விஜயராணியை  அவருடைய இறுதிப்பயணத்தில்  வழியனுப்பிவிட்டு  மறுநாள்  21  ஆம்  திகதி  வீடு  திரும்பி  அவருடைய   இறுதி    நிகழ்வுகளை  மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கையில்  அடுத்த  செய்தி  தமிழ்நாட்டிலிருந்து தளம்  ஆசிரியரும்  மூத்த  எழுத்தாளர்  அகிலனின்  மருமகனுமான  பா. ரவியிடமிருந்து  வருகிறது.

” முருகபூபதி,  எங்கள்  சார்வாகன்  மறைந்தார்.”

” ஆளுமைகளையெல்லாம்  உம்மிடம்  அழைத்துக்கொள்ளும் வேலையைத்தான்  தொடர்ந்து  பார்க்கிறீரா…? ”   என்று  அந்தக்கடவுளிடம் உரத்துக்கேட்கின்றேன்.  ஆனால்,  எனக்கிருக்கும்   அந்த  இறை நம்பிக்கைகூட   இல்லாத  ஒரு  மகத்தான  மனிதர்தான்  ஸ்ரீநிவாசன்  என்ற சார்வாகன். அவர்    பிராமணர்  சமூகத்தைச் சேர்ந்தவர்.  ஆனால்,  தனக்கு  மதம் மீதான   நம்பிக்கை ஏன்  இல்லாமல்  போனது…?  என்று  என்னிடம்  ஒரு உண்மைக்கதையையே   மெல்பனுக்கு  வந்திருந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார்.

யார்  இந்த  சார்வாகன்….?

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியம் நம்பியகப்பொருள் களவியல் ஒப்பீடு

முன்னுரை
செ.ரவிசங்கர்உலக மொழி வரலாற்றில் மேனாட்டு இலக்கண மரபுகளாகிய கிரேக்க லத்தீன் மரபுகளும் வடமொழி இலக்கண மரபும், தமிழ் இலக்கண மரபும் மிகப் பழமையானவைகளாகும், சிறப்புடையனவாகும். இப்பழமையான மூன்று மரபுகளின் தன்மை, வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை ஆராயும் போது தமிழ் மரபு மற்ற இரு மரபுகளினின்றும் தனித்து நிற்கும் சிறப்புடையது என்பது புலனாகின்றது. என்கிற கூற்றுக்குகேற்ப தமிழ் இலக்கண மரபு பொருளதிகாரத்தின் பால் சிறப்பு பெற்றுள்ளது. பொருளதிகாரத்தில் பொருள் ,பொருளைப் புலப்படுத்தும் வடிவம், பொருளைப் புலப்படுத்தும் முறை ஆகிய மூன்றும் இலக்கிய ஆய்வுக்குத் தேவை. பொருளதிகாரம் அம்முறையில் மலர்ந்த பொது இலக்கணமாகும். பொருளே அகம் புறமாய், களவு கற்பாய் நிற்கும். செய்யுளியல் வடிவை நினைவுபடுத்தும் உவமை மெய்ப்பாடு பொருளியல் என்பன பொருள் புலப்பாட்டு முறைகளை அறிவிக்கும் இவ்வாறு மூன்று நிலைகளில் இலக்கியக் கூறுகளை பொருளதிகாரத்தில் காணலாம். தமிழ் மொழியில் தொல்காப்பித்திற்கு  அடுத்து வந்துள்ள இலக்கண நூல்களில் நம்பியகப்பொருளும் ஒன்று, இந்நூலில் உள்ள களவியல் பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் களவியல் சிந்தனை எந்த அளவில் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது என்பது புலப்படும் அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பாக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பிய களவியல் உள்ளடக்கம்
தொல்காப்பியக் களவியல் பகுதியில், களவு ஒழுக்கத்தின் இயல்பு, காதல் முன்னைய நல்வினையால் விளைவது முதற் சந்திப்பின் விளைவு, மானுட மகளே எனத்துணிதல், தலைவன்கூற்று, தலைவன் தோழியிடம் பேசுதல், களவுப் புணர்ச்சிக்கு நிமித்தக் காரணங்கள், கைக்கிளைப் பெருந்திணை, அன்பின் ஐந்திணைக்கு உரிய உணர்வு நிலைகள், களவு ஒழுக்கத்தில் தலைவன் கூற்றுக்கள், தலைவியின் வேட்கைக் குறிப்பு, கண்களே உணர்த்தும் மகளிர் அல்ல நடையில் பேசுதல், களவுக் காலத்தில் தலைவி கூற்றுக்களும் மெய்ப்பாடுகளும், தலைவி சினந்து பேசும் இடம், தோழி கூற்று, செவிலக்கூற்று, நற்றாய் கூற்று, ஐயம் தெளிதல் காதலர்கள் தாமே சந்தித்துக் கொள்ளுதல், தலைவி குறியிடம் கூறுதல் தோழியும் களஞ்சுட்டல், தாய் என்பது செவிலியைக் குறித்தல் தோழி செவிலியின் மகள், தோழி உதவுங்காலம், தோழியின் உதவி பகற்குறி, இரவுக்குறி இடங்கள், தந்தை தமையன் அறிதல், இருவகைத் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொல்காப்பியரின் களவியல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

Continue Reading →