நண்பர் எம்.பெளசரின் முகநூல் பதிவு மூலம் ராஜசிங்கம் மாஸ்ட்டர் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஈழத்தின் முக்கிய பெண் ஆளுமைகளின் (நிர்மலா இராஜசிங்கம், ராஜனி திரணகம, சுமதி சிவமோகன், வாசுகி இராஜசிங்கம்) தந்தை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் உப அதிபராக நீண்ட காலம் பணி புரிந்தவர். இவருடன் எனக்கு நேர்முக அறிமுகம் கிடையாது. ஆனால் முதன் முதலாக இவரை நான் கண்ட போது இவரது புதல்விகளின் பெயர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டம். பதின்ம வயதில், நண்பர்களுடன் கும்மாளமடித்துச்சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துப் பறந்து திரிந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் யாழ் கே.கே.எஸ் வீதியிலே எப்பொழுதும் பல்வேறு காரணங்களுகாகத் திரிந்துகொண்டிருப்போம். அப்பொழுதுதான் இவரை முதல் முதலாக அறிந்து கொண்டேன்.
அப்பொழுது இவர் யாழ்ப்பாணக்கல்லூரிக்குச் செல்வதும், சென்று திரும்புவதும் கே.கே.எஸ் வீதி வழியாகத்தான். ஸ்கூட்டரில் சென்று திரும்புவார். ஸ்கூட்டரில் சென்று திரும்பும் இவர் மாணவர்களான எம் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. இவர் தனது மகள்களில் ஒருவரான சுமதி சிவமோகன் (அப்பொழுது அவர் சுமதி ராஜசிங்கம், மாணவி) ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்க, ஒரு பக்கமும் பார்வையைத் திருப்பாமல், செல்லும் பாதையிலேயே கவனத்தை வைத்தவராக விரைந்து கொண்டிருப்பார். பின்னால் அமர்ந்திருக்கும் மகளின் சுருண்ட தலைமுடி காற்றில் அலைந்து பறக்கும். தந்தைக்குத் தெரியும் பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகளை மாணவர்கள் பார்ப்பது. ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாது ஸ்கூட்டரின் ஆர்முடுகலை அதிகரித்துச்செல்வார். மகளோ வீதியெங்கும் தன்னை நோட்டமிடும் இளவட்டங்களை இலேசாகப்பார்த்துப் புன்னகைத்தபடி செல்வார். இவர்கள் இருவரும் அவ்விதம் காலையும், மாலையும் செல்லும் காட்சிகள் அக்காலகட்டத்தில் பதின்ம வயதில் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு மறக்க முடியாத அழியாத கோலங்கள்.
பின்னர் ஒருமுறை சந்தித்து ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகை சம்பந்தமாக விரிவுரையாளராக அக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு.மு.நித்தியானந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது வைமன்ட் வீதியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது என்று நினைவு. அப்பொழுது பிரதான வீட்டில் ராஜசிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வளவிலிருந்த இன்னுமொரு வீட்டில் நித்தியானந்தனும், நிர்மலா நித்தியானந்தனும் வசித்து வந்தனர். முதலில் பிரதான வீட்டுக்குச் சென்றபொழுது, அங்கிருந்த ராஜசிங்கம் அவர்கள் அருகிலிருந்த வீட்டைக்காட்டி அனுப்பி வைத்தார்.