நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் “துப்பாக்கிச் சன்ன” எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி – யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.
“தமயந்தி”: நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர் ‘இளைஞர்’. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் ‘கமெரா”வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. “சாம்பல் பூத்த மேட்டில்”, “உரத்த இரவுகள்” ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர்.
கண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; “1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்.”