இலங்கை அரசியல்: இலங்கையின் மிகவும் மோசமான தலைவர்கள் இருவர்!

'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச

ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது ‘போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்’ என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. ‘தர்மிஷ்ட்டர்’ என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

Continue Reading →

“சின்னமாமியே” புகழ் கமலநாதன்! மறைக்கப்பட்ட பாடலாசிரியரும் மறைந்தார்! இலங்கை தமிழ்பொப்பிசைப்பாடல் பிதாமகருக்கு அஞ்சலி

"சின்னமாமியே"  புகழ்  கமலநாதன்! மறைக்கப்பட்ட   பாடலாசிரியரும்  மறைந்தார்! இலங்கை  தமிழ்பொப்பிசைப்பாடல்    பிதாமகருக்கு அஞ்சலிஇலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்,  கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்  பிரசித்தமான  பாடல்தான்  ”  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே ?  பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   “தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்,  தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது. ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன்  நேற்று (26-01-2016)  வடமராட்சி  –  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.

சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்,  வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர். சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர். பாடல்   புனையும்  ஆற்றலும்  இவருக்கிருந்தமையால்  சுமார் அரைநூற்றாண்டுக்கு  முன்னர்  எழுதிய  பாடல்தான்  சின்ன  மாமியே.   எனினும்  அதனை  மேடைகள்தோறும்  நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால்,  கமலநாதனின்  பெயர்  வெளியில் தெரியவில்லை.   எனினும்  இப்பாடலின்  ரிஷிமூலத்தை  காலம் கடந்து  எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன்  வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார். இலங்கை   பத்திரிகைகளில்  இச்செய்தி  பகிரங்கமானபொழுது தன்னடக்கம்    பேணியவர்  கமலநாதன்.

ஒரு  காலகட்டத்தில்,  ஏ.ஈ. மனோகரன்,  நித்தி  கனகரத்தினம், இராமச்சந்திரன்,  முத்தழகு, அமுதன் அண்ணாமலை  முதலான  பலரால்  பொப்பிசைப்பாடல்கள்    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பிரபல்யம்   பெற்றன. அவ்வாறே  சிங்கள  மக்கள்  மத்தியில்  எச்.ஆர். ஜோதிபால,  பிரடீ சில்வா,   ஷெல்டன்  பெரேரா,  எம்.எஸ். பெர்னாண்டோ,  மில்டன் மல்லவராச்சி  முதலானோரும்  பிரபல்யம்  பெற்றிருந்தனர்.

சமூக சீர்திருத்தம்  தொடர்பாகவும்   மனிதர்கள்,  மற்றும்   மாறிவரும் உலகத்தின்   நவநாகரீகம்   பற்றிய  அங்கதச் செய்திகளும்  இந்தப்பொப்பிசைப்பாடல்களில்   தொனிக்கும்.    இன்றைய   நவீன கணினி   தொழில்நுட்ப  சாதனங்கள்  இல்லாமலேயே   குறைந்தளவு வசதிகளுடன்   பொப்  பாடல்களின்  ஊடாக அவற்றை    இயற்றியவர்களின்  கருத்துக்களை  நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும்  நளினமான  ஆடல்கள்  மூலமும்  இந்தப் பாடகர்கள்   மக்கள்  மத்தியில்    எடுத்துச்சென்றனர். ஆனால்,  கேட்டு  ரசித்து  தாமும்  பாடும்  மக்களுக்கோ  இந்தப்பாடல்களை    இயற்றியவர்  யார்  ?  என்பது  தெரியாது.   அவ்வாறே    கமலநாதனும்  கிணற்றுள்  விளக்காக  வாழ்ந்தார்.

Continue Reading →

பத்தி 6: இணையவெளியில் படித்தவை

பெண் உலகம் பற்றி ஒரு புரிதல் -நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie)

நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி

சத்யானந்தன்

ஆண் பெண் இரு வேறு உலகங்கள் என்பது கால காலமாக நிலைத்து விட்ட ஒன்று. அது இயல்பானதுமே. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறைந்த பட்சப் புரிதல் ஒருவர் உலகை பற்றி இன்னொருவருக்குத் தேவை. அன்பில் பிணைய, புண்படுத்தாமல் இருக்க, சேர்ந்து பணியாற்ற, பரஸ்பரம் உற்ற துணையாய் நிற்க எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் காண்பது என்ன? பெண்ணுக்கு ஆணின் உலகைப் புரிந்து கொள்வதில் அக்கறை அதிகமாக இருக்கிறது. அதற்குக் கட்டாயம் மட்டுமே காரணம். இல்லையேல் அந்தப் பெண் உணர்வு பூர்வமாகக் குடும்பத்துக்குள்ளும் நிராகரிப்பும் கொச்சைப்படுத்தப் படுதலுமென சமூகத்துக்குள்ளும் தாக்குதலுக்கு ஆளாவாள்.

அடிச்சி சமகால நைஜீரிய எழுத்தாளர். Purple Hibiscus, Half of a yellow sun, Americana ஆகிய இவருடைய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை. பெண்ணாயிருப்பது என்பது என்ன அதன் வலியும் அவள் மீதான வன்முறைகளும் எத்தகையவை என்பதை ஒரு சொற்பொழிவில் நமக்குப் புரிய வைக்கிறார். நகைச்சுவையும் நுட்பமாக வெளிப்படும் அறச்சீற்றமுமான அந்த உரைக்கான இணைப்பு — இது.

உயர்பதவிகளில் இன்றைய நிலவரம் கூடப் பெண்கள் மிகவும் குறைவானோரே. உண்மையில் யார் தலைமை ஏற்று வழி நடத்த முடியும்? அதை அவர் ஆண்பால் அல்லது பெண்பால் என்னும் பால் அடிப்படையில் முடிவு செய்ய இயலுமா? தனது குழுவை சகபணியாளர்களை வழி நடத்தக் கூடியவர், கற்பனை வளமும், புதிய இலக்குகளை எட்டும் உற்சாகமும் உடையவர் என்பதே அடிப்படையாக இருக்க முடியும். இன்றைய சிந்தனை அவ்வழியிலேயே செல்வது. ஆனால் நாம் இன்னும் பெண்கள் தலைமை ஏற்கும் ஒரு சூழலை உருவாக்கவே இல்லை. அடிச்சி நாம் பெண்களை குழந்தைப்பருவத்திலிருந்தே எப்படி நடத்துகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இன்றைய சூழலில் நாம் அனைவருமே பெண்ணியவாதிகளாக மாற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். பெண்ணியம் பேசுவது மேற்கத்திய சிந்தனை என்னும் அணுகுமுறையைக் கண்டிக்கிறார். திருமணத்துக்கு முன் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம் அவளுக்குத் தரும் போதனைகள் ஏன் ஒரு இளைஞனுக்கு நாம் தருவதே இல்லை என்னும் கேள்வியை அவர் எழுப்புகிறார்.

Continue Reading →

வீரியம் குன்றாத சாதியம்!

எழுத்தாளர் க.நவம்– கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். –


வீரியம் குன்றாத சாதியம்!எமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

இந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன? இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.

வரலாறு என்பது ஆதிக்க சக்தியினரின் – ஆதிக்க சக்தியினருக்காக – ஆதிக்க சக்தியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் புதிய நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின.  மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டுவந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’  கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’  ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

Continue Reading →

‘காலம்’ சஞ்சிகை ஆதரவில் ஓவியர் மருதுவுடன் ஓர் உரையாடல்!

ஓவியர் மருதுவுடன் நடைபெற்ற சந்திப்பு பற்றிய அறிவித்தல் இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால் பிரசுரமாவதில் தாமதமாகிவிட்டது. ஒரு பதிவுக்காக அதனை இங்கு பதிவு செய்கின்றோம். – பதிவுகள் –…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 146 : சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி…

சரத்சந்திரரின் தேவதாஸ்சரத்சந்திரர்அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான ‘நீல கண்டப்பறவையைத்தேடி ‘ வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் ‘வாழ்க்கையென்றால் புயல்’ போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , ‘நல்லநிலம்’ பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

சிறிய நாவல். விரிந்த , ஐந்நூறு பக்கங்களைக்கடந்த பெரிய நாவல்களிலொன்றல்ல. மானுட உளவியல் போராட்டங்களை விரிவாக, பக்கம் பக்கமாக விவரித்துச்சொல்லும் படைப்புமல்ல. எனக்கு அதிகம் பிடித்த இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவலுமல்ல. ஆனாலும் வாசித்த பொழுது முக்கியமாக நாவலின் முடிவினை வந்தடைந்த பொழுது நெஞ்சினை அதிர வைத்த படைப்பு சரச்சந்திரரின் தேவதாஸ்.

ஏன் இந்தப்படைப்பு மிகுந்த வரவேற்பினையும், ரோமியோ-யூலியட், லைலா- மஜ்னு , அம்பிகாபதி- அமராவதி வரிசையில் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்பெற்றது என்று சிந்தனையோடியது.

Continue Reading →

இறுதிக்கட்டத்தில் ‘குடிவரவாளன்’!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அப்பாடா! ஒரு வழியாக எனது ‘குடிவரவாளன்’ நாவலை இயலுமானவரையில் பிழை திருத்தி ஓவியா பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். பிழை திருத்துவது போல் மிகவும் சிரமமான காரியம் வேறொன்றுமில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிழை தப்பிப்பிழைத்து விடும் அதிசயத்தை என்னவென்பது. இந்நூலைத் தமிழகத்தில் வெளியிடும் ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகப்புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழ் அகதியொருவன் எவ்விதம் சட்டவிரோதக்குடிவரவாளனாக நியூயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் இருப்பினை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கின்றான் என்பதை விபரிக்கும் நாவல் இது.

நாவலின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் 83 இனக்கலவர நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் அத்தியாயங்களாக இருந்தபோதிலும், நாவல் முழுவதும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ,மண்ணையே கதைக்களமாகக்கொண்டு, அங்குள்ள பல்வகை மாந்தர்களைப்பாத்திரங்களாகவும் கொண்டு நடைபோடுகிறது. அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு, என் மகள் தமயந்தியால் சரி, பிழை பார்க்கப்பட்டு வெளியிடுவதற்குத் தயார் நிலையிலுள்ளது. அதனை மின்னூல் வடிவில் என் வலைப்பதிவான http://vngiritharan23.wordpress.com தளத்தில் வாசிக்கலாம். காலம், நேரம் கூடி வரின் அம்மொழிபெயர்ப்பும் நூலுருப்பெறும்.

விரைவில் ‘குடிவரவாளன்’ தமிழகத்தில் வெளிவரும். நூல் வெளிவந்ததும் நூல் பற்றிய மேலதிகத்தகவல்களை அறியத்தருவேன். ஓவியா பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி!

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் – (3, 4 & 5)

- வெங்கட் சாமிநாதன் -– அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –


நினைவுகளின் தடத்தில் – (3)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் -3

உண்மை- என ஒன்று இருப்பதாகவும் அதனைப் பாதுகாப்பதாயும் மெய்யியல் விளங்குகிறது எனச் சொல்லிக்கொண்டு அக்காலத்தில் கிரேக்கர்கள் சிலர் திரிந்தனர். மெய்யியலாளர் என்போர் உண்மையின் காவல் நாய்கள் என்றும்,…

Continue Reading →

தெற்கிலிருந்து வரும் ரயில் காதலிக்காக- நீட்டி நிமிர்ந்து உறங்கும் பாதை! தமயந்தியின் கண்காட்சியில் பிரக்ஞாபூர்வமான புகைப்படங்கள்.

- தமயந்தி (நோர்வே) -நெருக்கடியான சூழ் நிலையில்தான் உன்னதமான கலை, இலக்கியங்கள் பிறக்கும்/ என்றான் ஒரு அறிஞன். இன்று நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தவிக்கின்ற யாழ் மண்ணுக்கு சமீபத்தில் சென்றபோது அந்த அறிஞனின் வார்த்தைகள்தான் எத்துணை அர்த்தம் பொதிந்தது என்பது புலனாகியது. ஷெல்கள் விழுந்தாலும், வானில் பறக்கும் ஹெலிகொப்டர் பறவைகள் “துப்பாக்கிச் சன்ன” எச்சில்களை துப்பினாலும், வரட்சிக்கு வசந்தம் வீசுமாப்போல் இலக்கிய அரங்குகளும், நூல் வெளியீடுகளும், கவியரங்குகளும் குறையேதுமின்றி நடந்து கொண்டிருப்பதை அங்கு காண முடிந்தது. இன்று தமயந்தியின் புகப்படக் கண்காட்சி – யாழ்.பீச் இன் ஹோட்டேலில் என்ற விளம்பரத்தை நாளேடு ஒன்றில் பார்த்ததும் ஆர்வம் மீதுற விரைந்தேன்.

“தமயந்தி”: நேரில் சென்று பார்த்த பின்பே என் கணிப்புத் தவறாகியது. அவர் ‘இளைஞர்’. ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது கரம் ‘கமெரா”வை மட்டும் பிடிக்கவில்லை, இவரது பேனாவில் பிறந்த இரண்டு கவிதை நூல்களும் உண்டு. “சாம்பல் பூத்த மேட்டில்”, “உரத்த இரவுகள்” ஆகிய இரண்டு தொகுப்புகளின் பிரம்மா இவர்.

கண்காட்சியில் இவர் வெளியிட்ட பிரசுரம் இரத்தினச் சுருக்கமாக புகைப்படக் கலையின் தாற்பரியத்தை விளக்குகிறது. அவர் சொல்கிறார்; “1839இல் புகைப்படம் தோன்றியது. இற்றைவரை காலத்தில் உலகெங்கிலுமான அறிவியற் சாதனைகளினாலும், படைப்புத்திறன் மிக்க கலைஞர்களின் பரிசோதனை முயற்சிகளினாலும் கலை என்ற வகையில் பாரிய வளர்ச்சி நிலைகளை அது எய்தியிருக்கிறது. ஆனால், இன்றும் ஈழத் தமிழர்களிடையில் புகைப்படத்துறை ஒரு கலையாக ஸ்தாபிதம் அடைந்திருக்கிறது எனக் கூற முடியாது. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கியுள்ள ஒரு தொழிலாகவும், வெளியில் சில நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சடங்காகவுமே இது கருதப் படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளையோ, இத்துறைக் கலைஞர்களாகத் தமது ஆளுமைகளை ஸ்தாபித்துக் கொண்டவர்களையோ இங்கு காண முடியாமலே இருக்கிறது. எமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் இவை பற்றிய செய்திகளோ, கட்டுரைகளோ முக்கிய இடத்தைப் பெறுவதுமில்லை. இந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல. எமது சமூக, பொருளாதார, அரசியற் கலாசார அம்சங்கள் புகைப்படம் என்ற கலை வடிவத்தினூடாக வெளிப்பாடு காணவேண்டும். ஆளுமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்.”

Continue Reading →