(இக் கட்டுரை என் அண்மையில் மறைந்த மனைவியார் வைத்தியை சீதாதேவியுடன் செய்த ஒரு கூட்டு இலக்கிய முயற்சியே. பாரதியார், பெண்ணுரிமை எனும் விடயத்தில் என்னவெல்லாம் எழுதியுள்ளார் என ஒரு வாரமாகக் கூடி ஆராய்ந்து, ஆணுரிமையையும் விட்டுக் கொடுக்காமல் தர்க்கித்தே முடிவுகளை எடுத்தோம். — கூட்டாசிரியர் கோ-ம.)
சுப்பிரமணிய பாரதியார் பெண் உரிமையை ஆதரித்துப் பாடி இந்தியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலவர்களுள் ஒரு முன்னோடி எனலாம். இன்றிருந்து கிட்டத் தட்ட ஒருநூற்றாண்டு காலத்தின் முன் எழுதப்பட்ட பாரதியாரின் பெண்ணுரிமைப் பாடல்களில்: மனைத் தலைவிக்கு வாழ்த்து, பெண்விடுதலை, பெண்விடுதலைக் கும்மி, புதுமைப்பெண், பெண்மை, எனும் பாரதியின் தனிப் பட்ட, குறுகிய நேரடிக் கவிதைகளை நாம் விசேடமாகக் குறிப்பிடலாம். அத்துடன், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, எனும் நீண்ட கதைக் கவிதைகளிலும் அன்று பெண்கள், ஆண் ஆதிக்கத்தால் பட்டு வந்த பிரச்சினைகனை மறைமுகமாகப் பாரதியார் விளக்கி இருக்கின்றார். மேலும் அவரின் கண்ணம்மா கவிதைகள் மூன்றிலும், மகாகாளி, முத்துமாரி, கோமதி, மகாசக்தி, எங்கள் தாய், தமிழ்த் தாய், பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரிகள், தாய் மாண்பு, அம்மாக் கண்ணுப் பாட்டு, வள்ளிப்பாட்டு, ராதைப்பாட்டு, கண்ணம்மா என் குழந்தை, என்னும் கவிதைகளிலும், பெண்மைக் குணங்களை மனதாரப் போற்றி இருக்கின்றார். மனப் பெண் என்னும் ஒரே ஒரு கவிதையில் மட்டும் பெண்களின் மாறிடும் மனோநிலை பற்றி அவர் கிண்டல் செய்திருக்கின்றார். இந்தக் கட்டுரையில், பெண் விடுதலைக் கும்மி எனும் ஒரேயொரு கவிதையை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து, விளக்கி, பாரதியாரின் பெண்ணுரிமைத் தொண்டினை ஆராய்ந்து மதிப்பிடுகிறோம். முதலில், இதோ, சந்தம் பிரிக்கப் பட்ட அக் கும்மிக் கவிதை: