நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே அறிந்தவன் நான். தொடர்ந்து அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின் பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும் இதழ்களிலும் நான் வாசித்திருக்கிறேன்.
பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட அவரது எழுத்துலக அனுபவங்கள், அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச் சொல்லத் தவறிய கதைகள் என்ற புனைவு சாரா இலக்கியத்திலும் இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.
20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல் நினைவுகளின் தொகுப்பாக அல்லது நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்கலாம். இதனைப் பிரசுரித்ததன் மூலம் அவர் தன் நினைவுச் சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது, உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும் படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.
இனி இந்நூலில் உள்ள சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
முதலாம் அத்தியாயத்தில் புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார். லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட, அது ஏற்படுத்திய விபரீதங்கள் அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.
“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம் “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக் கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட, ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.