சிறுகதை: விசுவாசம்

ஶ்ரீராம் விக்னேஷ்“ நாட்டில  நடக்கிற  தப்புகளையெல்லாம்  என்னால  முடிஞ்சவரைக்கும்   தடுக்கணும்….  சம்மந்தப்பட்டவங்களைப்  புடிச்சு  சட்டத்துக்கு  முன்னால  நிக்கவெச்சுத்  தண்டிக்கணும்….  இந்த  ஒரே  நோக்கத்துக்காகத்தான்  நான்  இந்தப்  போலீஸ்  வேலையை  விரும்புறேனே  தவிர,  வேற  எந்த  நோக்கமும்  எனக்குக்  கிடையாது  ஐயா….”  பணிவோடு  பேசினேன்  நான்.

என்  பேச்சுக்குள்  பொதிந்து  கிடந்த  கம்பீரத்தையும், எதிர்காலத்தில்  ஒளிவிட்டுப்  பிரகாசிக்கப்  போவதுபோல,  அதன்மேல்  தெரிந்த  களையையும்,  அன்பழகன்  ஐயா  உள்ளூர  எடைபோடுவதை  என்னால்  உணர  முடிகின்றது.
அறுபது  வயதைக்  கடந்துவிட்டபோதும்,  இன்னமும்  துடியாட்டமாய்  செயல்படும்  அன்பழகன்  ஐயா  முகத்திலே  இலேசானதோர்  புன்னகை  தெரிந்தது.

“இந்த  பாருப்பா….  என் வயசில  பாதிக்கும்  கம்மியானவன்  நீ….  அத்தோட  ஒலகத்தைப்பத்தி  எம்புட்டு  தெரிஞ்சுகிட்டிருக்கியோ  எனக்கு  தெரியாது….  கடமை, நேர்மை  அப்பிடி  இப்பிடீன்னு  சொல்லிக்கிட்டு,  இந்த  உத்தியோகத்துக்கு  போறவங்க  ரொம்பப்பேரு,  நாளைக்கு  நாலு  காசைக்  காணுறப்போ,  கையை  அழுக்கு  ஆக்கிடுராங்க….  நீ  அப்பிடிச் செய்வேன்னு  நான்  சொல்ல  வரல்ல….  நீயா  விரும்பாவிட்டாலும்,  நீ  இருக்கக்கூடிய  சூழ்நிலை  உன்னய  செய்ய வெச்சிடும்….”

சூழ்நிலையின்  நிதர்சனத்தை  எண்ணி  நொந்தபடி  பேசினார். 

“ ஐயா…. நீங்க  சொல்றது  எனக்குப்  புரியாமலில்லை….  அதே டயிம்  அடுத்தவங்க  கடமையில  நான்  குறுக்கை  போகப்போறதும்  இல்லை….  என்  கடமையில  யாரையும்  கிராஸ்பண்ண  விடப்போறதும்  இல்லை….  மிஞ்சிப்போனா  என்ன  பண்ணிடுவாங்க….  தண்ணியில்லாத  காட்டுக்கு  மாத்திப்புடுவோம்னு  மெரட்டுவாங்க….  மாத்திட்டுப்  போகட்டுமே….  அதுக்குமேல  என்ன  பண்ணுவாங்க….  வெசத்தையா  வெச்சுடுவாங்க….  அப்பிடீன்னாலும்  பரவாயில்ல….”

என்  பேச்சிலே  தெரிந்த  உறுதி, அன்பழகன்  ஐயாவை  சிறிது  அதிர வைத்தது. தொடர்ந்து  அவரது  பேச்சிலே  சிறிது  கோபம்  தெரிந்தது.

“ஏ….  என்னப்பா  பேசுறே….  கொஞ்சம்  நல்ல  வார்த்தையாய்  பேசுப்பா….”

நான்  தொடர்ந்தேன்.

Continue Reading →