நூல் அறிமுகம்: முருகபூபதியின் “சொல்லத் தவறிய கதைகள்” இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள்

நூல் அறிமுகம்: முருகபூபதியின்    "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் கான்பரா  யோகன் --நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ  முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து  இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே  அறிந்தவன் நான்.  தொடர்ந்து  அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின்  பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும்  இதழ்களிலும்  நான் வாசித்திருக்கிறேன். 

பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட  அவரது  எழுத்துலக அனுபவங்கள்,   அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச்  சொல்லத் தவறிய கதைகள்  என்ற புனைவு சாரா இலக்கியத்திலும்  இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.    

20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல்  நினைவுகளின் தொகுப்பாக   அல்லது  நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின்  தொகுப்பாக பார்க்கலாம். இதனைப்  பிரசுரித்ததன் மூலம் அவர் தன்  நினைவுச்  சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது,  உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும்  படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.

இனி இந்நூலில் உள்ள  சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில்  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

முதலாம் அத்தியாயத்தில்  புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய  குறிப்புகளை தந்திருக்கிறார்.  லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட,  அது ஏற்படுத்திய விபரீதங்கள்  அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து  வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.

“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம்  “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக்  கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட,  ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.

Continue Reading →

கவிஞர் எம்.ஏ.ஷகியின் கவித்துவத்திற்கு நாம் செய்யவேண்டிய பதில்மரியாதை.

கவிஞர் எம்.ஏ.ஷகி

முகநூல் மூலம் அறிமுகமான சக கவிஞர் எம்.ஏ.ஷகி. சில வருடங்களாகவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு காலமானார் என்ற செய்தியை முகநூல் வழியே தெரிந்துகொள்ள நேர்ந்தது ஒரு கையறுநிலையில் மனதை அவலமாக உணரவைத்தது. வளமற்ற குடும்பச் சூழலும் மூன்று குழந்தைகளைத் தன்னந்தனியே பராமரிக்கவேண்டிய கட்டாயமும் அவருடைய கவித்துவ வீச்சை எந்தவிதத்திலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை என்பதை அவர் கவிதைகளை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

அவரைப் பற்றி சக கவிஞர் நஸ்புல்லாஹ். ஏ தன் முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“June 27 at 9:45 AM ·
நேற்று ஸகியின் ஜனாஷாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.அவரது மூன்றாவது மகள் என் அருகில் வந்து “எப்ப வந்திங்க”என கேட்டாள் அவளது மழலை முகதில் அப்பிக்கிடந்த சோகங்கள் என் நரம்புகள் எங்கும் பாய்ந்து பெரும் ரணத்தைத் தந்தது.ஜனாஷா அடக்கத்தின் போது அவரது மகன் அழுது கண்ணீர் வடித்தான்.இன்று ஷகியின் மூத்த மகள் சஷ்னாவை பஸ்ஸில் சந்தித்து எனது இருக்கையை அவளுக்கு கொடுத்தேன்.அவளும் பெரும் துயரத்தில் இருக்கிறாள் ஸகி தன் குழந்தைகளுடன் ஒரு தோழியாக பழகியதை நான் அறிவேன்.எனினும் ஸகி தன் குழந்தைகளுக்காக தூய அன்பைத் தவிர எதனையும் சேமித்து வைக்கவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.”

’சிறு துளி பெருவெள்ளம்’. சின்ன வெள்ளம் என்ற அளவிலாவது கவிஞர் ஷகியின் பிள்ளைகளுக்கென முகநூல் நட்பினராகிய நாம் நம்மால் முடிந்த அளவு நிதி திரட்டித் தரலாமே. செய்யவேண்டிய காலத்தில் செய்யும் உதவி எத்தனை சிறிதானாலும் ஞாலத்தைவிட மிகப் பெரிதல்லவா? இவ்வாறு செய்யும் நிதியுதவி நம் சக மனிதரும், சக கவியுமான ஷகிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக, காட்டும் மனமார்ந்த மரியாதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கே முகநூலில் நான் அவ்வப்போது படித்து ரசித்த கவிஞர் எம்.ஏ.ஷகியின் அருமையான கவிதைகள் சில, என் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு தரப்பட்டுள்ளது.
உங்கள் கவித்துவத்தை சாவு காவு வாங்கவியலாது. தோழி. சென்று வாருங்கள்.

Continue Reading →