எழுத்தாளர் தேவகாந்தனின் அடுத்த நாவல் ‘மேகலை கதா’

எழுத்தாளர் தேவகாந்தன்நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனுடன் இன்று மாலை சிறிது நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலான ‘மேகலை கதா’ என்பது பற்றிக் குறிப்பிட்டார். அது பற்றிய குறிப்பொன்றினையும் தனது வலைப்பூவிலும் , முகநூலிலும் வெளியிட்டிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ்க்காப்பியங்களில் எனக்குச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகவும் பிடித்தவை. குறிப்பாக மாதவி , மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் எனக்குப்பிடித்த பெண் பாத்திரங்கள். இவர்களிலும் மணிமேகலை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்த பாத்திரமென்பேன்.

சாத்தனாரின் ‘மணிமேகலை’யைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்தபோது அக்காவியம் முழுவதும் தத்துவத்தர்க்கங்களால் நிறைந்திருந்ததை அவதானித்தேன். ஆச்சரியமாகவிருந்தது. அறிவுத்தாகமெடுத்து அலையும் எனக்குக் குடிப்பதற்கு நிறையத் தண்ணீரை உள்ளடக்கிய காப்பியம் மணிமேகலை.

மணிமேகலையை மையமாக வைத்துத் தமிழ்த்திரைப்படங்கள் பல வெளியாகியுள்ளன. டி.ஆர்.மகாலிங்கம், பி.பானுமதி நடிப்பில் ‘மணிமேகலை’ என்னுமொரு தமிழ்த்திரைப்படம் வெளியாகியுள்ளது. அண்மையில் கூடச் சிங்களப்படமான ‘பத்தினி’யில் மணிமேகலையின் பிறப்பு , இளம் பருவத்துக் காட்சிகள் உள்வாங்கப்பட்டிருந்தன.

மணிமேகலையை மையமாக வைத்து யாராவது நாவலொன்றினை எழுத மாட்டார்களா என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்குறையை விரைவில் தேவகாந்தன் அவர்கள் தீர்க்கவிருப்பது மகிழ்ச்சியளிப்பது. நாவல் தொடராக வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பவர்களீல் நானும் ஒருவன். வாழ்த்துகள் தேவகாந்தன்.

எழுத்தாளர் தேவகாந்தன் தனது அடுத்த நாவலான ‘மேகலை கதா’ பற்றிய குறிப்பொன்றினை அவரது வலைப்பதிவினில் வெளியிட்டுள்ளார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


‘மேகலை கதா’பற்றிய ஓர் அறிவிப்பு!   – தேவகாந்தன் –

புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன்.

புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத் தொடங்க தீர்மானித்தேன்.

அது அத்தனை சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்காக என்னை நான் நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்தது. அதனால் மறுபடியும் ‘மணிமேகலை’க்குள் புகுந்தேன். இந்திரவிழாவும், கண்ணகி- கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீள படிக்கவும் நேர்ந்தது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகும் இடைஞ்சல் இருந்தது.

பௌத்த தத்துவத்தை ஆழப் புரிந்துகொள்ளல் அத்தனை சுலபத்தில் கைகூடவில்லை. அது ஒரு நூலிழை தவறினாலும் பிற மத தத்துவங்களோடு, குறிப்பாக சமண மதத்தோடும், இந்து மதத்தோடும் ஊடாட்டம் கொள்வதாய் இருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தின் சமய நிலை, அவரது போதனைகளை பிற்காலத்தில் எழுதியோரது மனநிலையென இந்த உராய்தலுக்கான காரணங்களை விளங்க முயன்றேன். ஆயினும் நண்பர்களுடன் உரையாடினேன். ஆய்வு நூல்களை மேலும் விளக்கம் பெறும்வரை கற்றேன். ஒரு தெளிவு பிறந்ததான நம்பிக்கை வந்தது.

Continue Reading →

ஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்

- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020முன்னுரை:
குற்றங்கள் அதிகமாகும் காலத்திலேயே அறம் சார்ந்த கருத்துகளை போதிக்க நூல்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத வெண்பாக்களால் அமைந்த பதினெட்டு நூல்கள் எடுத்தியம்பின. அவற்றை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவிய நூல்கள் என்றும் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் பொய்யாத மொழியாகிய திருக்குறளோடு கருத்தாலும் பொருளாலும் ஒன்றுபடும் உலக வசனம் என்ற சிறப்பிற்குரிய பழமொழி நூலின் பாடல்கள் ஆய்வு பொருளகின்றன.

கற்றவன் அடையும் சிறப்பு:
கல்வியின் சிறப்பை மனத்தில் கொண்ட மூன்றுரையரையரும் திருவள்ளுவரும் முறையே தாங்கள் இயற்றிய நூலான பழமொழியில் முதல் பத்து (1-10) பாடல்களாலும் திருக்குறளில் 40ஆம் அதிகாரத்தில் பத்து (391-400) குறட்பாக்களாலும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியை முறையாகக் கற்றுத்தேர்ந்தவன், தனது நாட்டை விட்டகன்று வேறு நாட்டுக்குச் சென்றாலும், அவனது அறிவுத்திறனைக் கண்டு யாவரும் சிறப்பு செய்து உண்வளிப்பதால் சொந்த நாட்டிலிருப்பதாகவே எண்ணுவான் என்பதை,

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.” (பழமொழி நானூறு. 04)

என்ற பாவரிகளால் கற்றவன் அடையும் சிறப்பைக் கூறுகிறார்.

சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்கு சொந்தக்காரரான வள்ளுவர், கற்றவன் அடையும் சிறப்புகளை தனது தமிழ்மறையில்,

“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (திருக்குறள். 397)

என்னும் குறட்பா வாயிலாக கல்வி கற்றவனுக்கு எல்லா நாடுகளுமே சொந்த நாடாகும் என்ற உயர்ந்த கருத்தை எடுத்தியம்புகிறார்.

Continue Reading →