படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம்

படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி  “ யின் ஆளுமையைப்பற்றி  பேசும் ஆவணம் சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம்,  மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.

தற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை  பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம்  வளர்ந்திருக்கிறது.

அவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.

ஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை  பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.

இந்தத்  துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.

ஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத்  தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.
ஒரு ஆளுமையை  வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியா –  சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.

அகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால்,  சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.

அவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.

விழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல்,  ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.

இச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.

அதற்காக முன்னின்று உழைத்தவர்களை பாராட்டியவாறே மலருக்குள் பிரவேசிப்போம்.

இம்மலரை அவுஸ்திரேலியாவில் தமிழர் மத்தியில் நன்கறியப்பட்ட ஞானம் ஆர்ட்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஞானசேகரம் சிறீ றங்கன் அழகாக வடிவமைத்துள்ளார்.

“ பன்முக ஆளுமை அம்பி ஐயாவை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம் “ என்ற தலைப்பில் மலருக்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில் பங்களிப்பு – உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வு சமர்ப்பித்தல் – தமிழில் விஞ்ஞான – கணித ஆசிரியர் – தமிழ் குழந்தை பாடல்களுக்காக பெயர்பெற்ற குழந்தை இலக்கியவாதி – தமிழில் மருத்துவம் கற்பிக்கப்புறப்பட்ட மருத்துவர் சமூவேல் கிறீன் பற்றிய ஆய்வு முதலான பணிகளில் அம்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த  முன்னுரை பேசுகிறது.

Continue Reading →

இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைகள்

இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைகள் “ஆழ்ந்த அமைதி நிலையில் நினைவு கூரப்பட்ட உணர்ச்சிகள் கவிதைகள்” என்பர் கவிதையியலாளர். ரஜிதா இராசரத்தினமும் “மணல் கும்பி” என்ற கன்னிக் கவிதைகளோடு தன் வாழ்வனுபவங்களை ஆழ்ந்த அமைதி நிலையில் அசைபோட்டு, கவிதைகளாக்கி உங்கள் முன் தந்துள்ளார்.

வாழ்தல் ஒரு போராட்டம். அது இன்பம் தருவது, சமவேளையில் துன்பத்தையும் தருவது. அந்த அலையோட்டத்தில்தான் நாங்கள் வாழப் பழகிக் கொள்கிறோம். கவிஞர் தான் வாழும் சமூக மாந்தர்களின் வாழ்வின் ஊடாகவும், கண்டு கேட்டு வாழ்ந்து பழகிக் கொண்ட அனுபங்களின் திரட்டாகவும்  இக்கவிதைகளைத் தந்துள்ளார்.

ஏழ்மைத்துயரில் வாடும் மனிதர்கள், ஏமாற்றத்தைத் தரும் அறிந்தும் அறியாத முகங்கள், காலவோட்டத்தோடு எதிர்த்துப் போராடி வாழ்வை வெற்றிகொள்ள முனையும் மாந்தர்கள், மன இருட்டின் மாறாத வடுக்களை மூடி மறைத்து வாழத் தலைப்படும் மனித மனங்கள் என பல்வேறுவிதமாகவும் வாழ்வின் சாத்தியப்பாடுகளை எட்டமுனையும் எத்தனங்களை தன் கவிதைகளில் ரஜிதா இராசரத்தினம் தந்துள்ளார்.

நாள்தோறும் பற்றாக்குறைகளோடு வாழும் மனிதர்கள் உழைப்பின் உச்சத்தை எட்ட முடியாத அவலத்தை,

“இந்தப் புதுவருடமாவது
என் குழந்தைகளுக்குப்
புதுத்துணி வாங்கித் தருவதாக
வாக்குக் கொடுத்தேனே
அதுவும் இல்லை.”

என அழுகின்ற இழகிய மனங்களை தன் கவிதை வரிகளில் காட்டுகிறார். பாரம்பரியத்தையும் பண்பட்ட வாழ்வையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவிட்டு வாழச் சபிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணங்களையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

“தொலைத்ததைத் தேடுகிறோம்
தேடியும் கிடைக்காதவை
எத்தனை எத்தனையோ?”

என்ற வார்த்தைகளில் உள்ளமுங்கியிருக்கும் தேடல்கள்தான் எத்தனை? இந்த நிலையில்தான் இரசிக்கத் துளியளவும் திராணியற்றது இவ்வெளிர் நிலவு என மனத்துக்கு இன்பமும் குளிர்ச்சியும் தரும் நிலவை வெறுப்பாகக் கவிஞர் நோக்குகிறார்.
இயற்கையை உறவாகக் காணும் பண்பு முக்கியமானது. இது சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும் என்ற கவிதையில் வெளிப்படுகிறது.

“பரந்திருக்கும் இப்பெரும்
வெண்மணற் போர்வையில்
உருண்டு புரள்தலின் சுகத்தையும்
படுத்திருந்தே பறித்து
நாசியேறக் கனிந்திருக்கும்
நாவற்பழங்களின் சுவையையும்
இவைதான் மலைகளென
தொடர் தொடராய்
எதிர்கண்ட மணற்கும்பிகளின் பேரழகை
தினம் தின்று தீர்த்தும்
கொண்டாடி வாழ்கின்றோம்.”

Continue Reading →

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடன் ஒரு மாலைப்பொழுது!

தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவருடனான சந்திப்பொன்று இன்று மாலை ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 5 ஸ்பைஸ் (5 Spice) உணவகத்தில் நிகழ்ந்தது. மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள் தேவகாந்தன், கடல்புத்திரன், நண்பர் எல்லாளன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நிகழ்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களைப்பற்றிய எம் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டோம்; நனவிடை தோய்ந்தோம்.

Continue Reading →

‘வடலி’ பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!ரகுமான் ஜான்இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் ‘வடலி’ பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும். இவ்வகையில் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’, செழியனின் ‘ஒரு போராளியின் நாட்குறிப்பு’ போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல.

இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

ரகுமான் ஜானின் உரைகள், கட்டுரைகள் பலவற்றை முறையே கேட்டிருக்கின்றேன், வாசித்திருக்கின்றேன். அவை தர்க்கச்சிறப்பு மிக்கவையாக இருப்பதையும் அவதானித்திருக்கின்றேன். இந்நிலையில் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அமைப்புத்துறை, மூலோபாய தந்திரோபாயப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகள் தற்போதுள்ள சூழலில் தேவையானவை; முக்கியத்துவம் வாய்ந்தவை.

Continue Reading →