ஆய்வு: சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்

அறிமுகம்

- கலாநிதி சு.குணேஸ்வரன் -பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாடப்பட்ட சந்தர்ப்பம்

சீபர்ப்பதத்தின் பதிக வரலாறு பற்றிக் குறிப்பிடப்படும்போது சுந்தரமூர்த்தி நாயனார் திருக்காளத்தி மலைக்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே ஸ்ரீபர்வதத்துப் பெருமானை நெஞ்சில் நினைத்து அகக்கண்ணாற் கண்டு பாடிய திருப்பதிகமே சீபர்ப்பதமாகும். இத்தலம் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் சேக்கிழாரும் பர்வதம் என வடமொழியில் அழைக்கப்பட்டதை பருப்பதம் என தமிழில் வழங்கியுள்ளனர். ஆனால் சுந்தரரோ ஸ்ரீபர்வதம் என்பதனை சீபர்ப்பதம் என அழைக்கின்றார். இந்தியத்தேசத்தில் இருக்கக்கூடிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பொருமைகளையும் இயற்கை இன்பச்சூழல் நிறைந்த அழகையும் இப்பதிகத்தில் எடுத்துக்காட்டி மக்களை வழிப்படுத்தும் நோக்கில் இப்பதிகம் பாடப்பட்டுள்ளது.

இயற்கை வருணனைகள்

மலைச்சிறப்பு
விலங்குகள், பறவைகள் யாவும் சுதந்திரமாக உலாவித் திரிந்து வாழும் மலை சீபர்ப்பதமலை எனக் கூறப்படுகிறது. விருந்தோம்பும் பண்புடைய குறமாந்தர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழுகின்றவர்கள் என்பதற்கு உதாரணமாக யானைக்குலமே மனிதர்களுக்குரிய மானத்துடனும் பண்புகளுடனும் வாழும் மலையாக “பொலி சீபர்ப்பத மலையே” என்ற சொற்றொடரின் ஊடாக வளம்நிறைந்த மலைப்பிரதேசமாகச்  சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முப்புரங்களை எரித்த சிவபெருமான் விரும்பி உறைந்துள்ள புராண வரலாற்றையும் இயற்கையில் இறைவனைக் காணும் அழகினையும்

“மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப் பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.”

என்ற பதிகத்தில் சுந்தரர் அழகாகக் காட்டுவார். மானினமும் மரையினமும் மயிலினமும் தாமாகத் திரிந்து மேய்ந்து சுனைகளில் உள்ள நீரைப்பருகி மரங்களிலே தம் உடலை உராய்ந்து பொழில்கள் ஊடாகச் சென்று இனிய தேமாமரங்கள் நிறைந்த சோலையிலே துயில் கொள்ளுகின்ற காட்சியை மேற்படி விபரிக்கிறார். இவ்வாறான இயற்கை அழகு நிறைந்த மலையிலே இறைவன் வீற்றிருந்து அருள் பொழிகின்ற அழகு சீபர்ப்பதத்தில் மிக எளிமைநிறைந்த இன்தமிழில் பாடப்பட்டுள்ளது.

Continue Reading →

தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி…..

இலங்கைஇலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான வழிகளில் போராடுவதுடன் ,சட்டரீதியாக அவர்களின் செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். மாறாக இனத்துவேச விடத்தைக் கக்கும் குறிப்பிட்ட இனத்துவேசப் புத்தமதத்துறவிகளைப்போல் பதிலுக்கு சிங்கள மக்கள் மேல், புத்த மதத்தின் மேல் ஒட்டுமொத்தமாகப்பழியைச் சுமத்தினால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இலங்கைப்பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரர் இவ்விடயத்தில் இவ்விதம் சைவ ஆலயங்களுள்ள இடங்களில் அத்து மீறி விகாரைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்விடயத்தில் அமைச்சர் மனோ கணேசனின் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்கவை. வியாழக்கிழமை காலை ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றுக்குத் தமிழ்ப்பிரதிநிதிகளை அழைத்திருக்கும் அவரது செயலும் தற்போதுள்ள சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழர் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விகாரைகள் அமைப்பதன் மூலம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புத்தமதத் துறவிகள் சிலரின் செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இதனை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இப்பிரச்சினை எதிர்காலத்தில் உபகண்ட பிரச்சினைகளிலொன்றாகப் பெருஞ்சுவாலையாகப் பற்றி எரிவதற்குக் சாத்தியங்களுள்ளது.

இலங்கை பல்லின, பன்மொழி, பன்மத மக்கள் வாழுமொரு நாடு. இது தனியே புத்தமதத்தவர்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ மட்டும் சொந்தமான நாடு அல்ல. அனைவருக்கும் உரித்துள்ள நாடு. புத்த மதத்தவர்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினர். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் சிறுபான்மைச் சமூகங்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைத்துச் செயற்படவேண்டுமே தவிர, சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராக இனத்துவேச விடத்தினைக் கக்கி அரசியல் செய்யக்கூடாது. அது முழு நாட்டுக்குமே எதிர்காலத்தில்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

Continue Reading →

யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019) விழா பற்றிய அறிவித்தல்!

யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019)  விழா மலருக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் கலையரசி (2019)  விழா மலருக்கு ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

வணக்கம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம்-கனடா ஆண்டுதோறும் வெளியிடுகின்ற கலையரசி மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.  கடந்த ஆண்டுகளில் கலையரசி என்கிற உபகுழுவினூடாக நெறிப்படுத்தப்பட்ட கலையரசி நிகழ்வும் மலர் வெளியீடும் இவ்வாண்டு முதலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கலை-மரபுரிமை உபகுழு என்கிற ஆழ்ந்தகன்ற நோக்குடன் பரிணமித்த குழுவினூடாக நெறிப்படுத்தப்படுகின்றது,  

இதனடிப்படையில் இவ்வாண்டு மலருக்கான ஆக்கங்கள் வரலாறும் வரலாற்றுணர்வும் என்கிற கருப்பொருள் சார்ந்ததாக எதிர்பார்க்கப்படுகின்றன.  ஆக்கங்கள் புனைவுகளாகவோ, கட்டுரைகளாகவோ, ஆற்றுகைப் பிரதிகளாகவோ அமையலாம்.  உங்கள் ஆக்கங்கள் 800 சொற்களுக்கு உட்பட்டதாக அமைவது அவசியம்.  நீங்கள் அனுப்பிவைக்கின்ற பிரதிகள் மலரில் பிரசுரிக்கப்படுவது தொடர்பாக மலர்க்குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தயைகூர்ந்து உங்கள் ஆக்கங்களை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக ahc@jaffnahinducanada.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Continue Reading →