சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.
கவிதைகளை மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக அவர் கூறுவார். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொகுப்பில் இடம்பெற செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதுவதும், தொகுப்பு வெளியானதும் For the Joy of Sharing என்று அன்போடு உற்சாகமாக எழுதி கையெழுத்திட்டு தொகுப்பில் இடம்பெறும் அத்தனை கவிஞர்களுக்கும் தன் செலவில் தொகுப்புகளை வாங்கி அனுப்பிவைப்பதும் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியனுக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.
அப்படி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தொகுப்புக்காகத் தேடித் தேர்ந்தெடுத்து உரிய கவிஞர்களிடம் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவது பல்வேறு காரணங்களால் தாமதமாகி இன்று அந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு ன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது என்னுடைய cottage industry publishing house – ANAAMIKAA ALPHABETSக்குக் கிடைத்திருக்கிறது! அதற்காக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களுக்கும் தன் நட்பினருக்கும் தன் செலவிலேயே நூலின் பிரதியை அனுப்பிவைப்பது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் வழக்கம். எனவே குறைந்தபட்சம் 150 பிரதிகளாவது அவர் விலை கொடுத்து வாங்கிவிடுவார் என்பதால் அச்சகத்தாருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிட முடியும் என்பது நிம்மதியளிக்கும் விஷயம்!
நூலை சிறப்பாக வடிவமைத்துக்கொடுத்திருக்கும் தோழர் திருவுக்கும்(தோழர் முனியரசு) என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலின் விலை ரூ.200. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் விலைக்குக் கிடைக்கும். No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai – 600005, Opp to Rathna Café. தொலைபேசி 98844 27997
மின் நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
CONTINUUM (A Harvest of Modern Poetry) என்ற தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 100 கவிஞர்களின் 120 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள கவிஞர்கள் – கவிதைகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.