சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம், மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.
தற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம் வளர்ந்திருக்கிறது.
அவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.
ஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.
இந்தத் துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.
ஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத் தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.
ஒரு ஆளுமையை வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியா – சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.
அகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால், சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.
அவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.
விழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல், ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.
இச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.
அதற்காக முன்னின்று உழைத்தவர்களை பாராட்டியவாறே மலருக்குள் பிரவேசிப்போம்.
இம்மலரை அவுஸ்திரேலியாவில் தமிழர் மத்தியில் நன்கறியப்பட்ட ஞானம் ஆர்ட்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஞானசேகரம் சிறீ றங்கன் அழகாக வடிவமைத்துள்ளார்.
“ பன்முக ஆளுமை அம்பி ஐயாவை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம் “ என்ற தலைப்பில் மலருக்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது.
தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில் பங்களிப்பு – உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வு சமர்ப்பித்தல் – தமிழில் விஞ்ஞான – கணித ஆசிரியர் – தமிழ் குழந்தை பாடல்களுக்காக பெயர்பெற்ற குழந்தை இலக்கியவாதி – தமிழில் மருத்துவம் கற்பிக்கப்புறப்பட்ட மருத்துவர் சமூவேல் கிறீன் பற்றிய ஆய்வு முதலான பணிகளில் அம்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த முன்னுரை பேசுகிறது.