முன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.
காப்பியம் விளக்கம்
காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.
காப்பியம் என்பதில் ‘இயம்பு’ என்பது ‘சொல்’ எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் ‘குறும்பல்லியத்தன்’ எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் ‘காப்பியம்’ என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் ‘காப்பியம்’ என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.
காப்பிய இலக்கணம்
தமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி… (தண்டியலங்காரம், நூற்பா -8)
கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)