– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் ‘பாம்பும் ஏணியும்’. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. – பதிவுகள் –
சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான்.
’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்?
சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.
ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம்.
எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.
இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது.
குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.
“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது.
ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?