– எழுத்தாளர் உதயணன் ;டொரோண்டோ அவர்கள் 23.7.2019 காலமானார். அவரைப்பற்றி ஏற்கனவே எழுத்தாளர் கே.எஸ்,.சுதாகர் அவரது சுருதி வலைப்பூவில் எழுதிய இக்கட்டுரையினை அவரது நினைவாகப் பதிவு செய்கின்றோம். – பதிவுகள் –
கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்—ஆசிரியரின் மருமகன்–அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.
உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.
ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.
களுத்துறையில் வெளிவந்த ‘ஈழதேவி’ இதழின் வளர்ச்சிக்கும், அது பின்னர் இடம் மாறி – சிற்பி சி. சிவசரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 1958 முதல் 1966 வரை வெளிவந்த ’கலைச்செல்வி’ சஞ்சிகையின் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். இவரது நண்பர் பாலசுப்பிரமணியம் களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் ’ஈழதேவி’ இதழை நடத்தி வந்தார். 1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ்ச்சஞ்சிகையை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது, இவர்கள் இருவரும் சிற்பியைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பே ‘கலைச்செல்வி’ இதழ் வெளிவர அத்திவாரமானது.
இவர் தனது எழுத்துலகிற்கு வித்திட்டவர்களாக யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி தமிழாசிரியர் இ.கேதீஸ்வரநாதன், மற்றும் வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு.ஞானப்பிரகாசம் என்பவர்களை நினைவு கூருகின்றார்.
1983 இல் இருந்து 25 வருடங்கள் பின்லாந்தில் வசித்துவந்த உதயணன், தற்போது கனடாவில் வசிக்கின்றார் என்ற செய்தியை நண்பர் சொன்னார். அவரது ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ நூலை வாசிக்கத் தொடங்கியதும் பின்லாந்து நாட்டினுள் நான் பயணமாகத் தொடங்கினேன். வாசிக்கத் தூண்டும் விதத்தில் நகைச்சுவை உணர்வுடன் அந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தது.