இன்று ‘டொராண்டோ’வில் நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு விழாவில் வேந்தனார் அவர்களின் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன. இதற்காக வேந்தனார் அவர்களின் மகன் வேந்தனார் இளஞ்சேயைப்பாராட்ட வேண்டும். நிகழ்வு வெற்றிபெற உறுதுணையாக நின்ற அவரது உறவினரான கஜேந்திரன் ஆறுமுகம் குடும்பத்தினர், யாழ்இந்து(கனடா) பழைய மாணவர் சங்கத்தவர்கள் இவர்களுடன் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்து , நூல்களை வாங்கிச் சென்ற கலை, இலக்கிய ஆர்வலர்கள் , நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய சிறீமதி சங்கீதா கோகுலன் அவர்களின் சுவர சாகித்திய இசைக்கல்லூரிக் குழுவினர், சிறீமதி ரஜனி சக்திரூபனின் அபிநயலாலய நாட்டியாலயத்தினர் ஆகியோருக்கும், அக்கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகள் அனைவருக்கும், நிகழ்வில் சிறப்புரையாற்றிய திருமதி புனிதவதி பரமலிங்கம், திரு.அருண்மொழிவர்மன், திரு.உருத்திரமூர்த்தி சேரன் (கவிஞர் சேரன்) ஆகியோருக்கும், நூல்கள் பற்றிய உரைகளையாற்றிய பண்டிதர் ச.வே பஞ்சாட்சரம், திரு. வல்லிபுரம் சுகந்தன், மற்றும் திரு.தீவகம் வே.இராசலிங்கம் ஆகியோருக்கும் நன்றி கூற வேண்டும். நகரில் வேறு பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நிலையிலும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நிகழ்வில் தலைமையுரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை ஆகியவற்றைச் சிறப்பாக வழங்கியிருந்தார் வேந்தனார் இளஞ்சேய். இறுதியில் கலை, நிகழ்வுகளில் பங்குபற்றிய குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்களைத்தரம் பிரித்திருந்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளுக்கு, இளம் மாணவர்களுக்கு, வாசிப்பு அதிகமுள்ள வளர்ந்தவர்களுக்கு என வெளியான நூல்கள் அமைந்திருந்தன. குழந்தைகளுக்கான குழந்தைப்பாடல்களை உள்ளடக்கிய தொகுதிகள் மூன்றும் முறையே குழந்தைமொழி – பாகம் 1, 2 & 3 என்னும் தலைப்புகளில் வெளியாகியிருந்தன. இளம் மாணவர்களுக்கான மாணவர்களுக்கேற்ற வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு ‘மாணவர் தமிழ் விருந்து’ என்னும் தலைப்பிலும், வளர்ந்தவர்களுக்கான கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி ‘தமிழ் இலக்கியச் சோலை’ என்னும் தலைப்பிலும் வெளியாகின. இவை தவிர வேந்தனார் பற்றிக் கலை , இலக்கிய ஆளுமைகள் பலர் எழுதிய கவிதைகள் , கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு ‘செந்தமிழ்வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மலர்’ என்னும் பெயரிலும் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான வித்துவான் வேந்தனாரை இன்றைய தலைமுறையினருக்குச் செய்யும் அரும்பணியினை வேந்தனார் இளஞ்சேய் செய்து வருகின்றார். இதற்காக அவரை மீண்டுமொரு தடவை பாராட்டுவதோடு , மேலும் பல வேந்தனாரின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பலவற்றை வெளியிட வேண்டுமென்ற அவரது கனவும் நனவாகவும் வாழ்த்துகின்றேன்.
மேற்படி நிகழ்வில் வெளியான `செந்தமிழன் வேந்தன் வேந்தனார் நூற்றாண்டு விழா மல`ரில் `மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்` என்னும் தலைப்பில் எனது கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது.