ஏறு தழுவுதல் என்பது முல்லைநில மக்களின் மற மாண்பையும் குடிச் சால்பையும் பறைசாற்றி நிற்கும் வீர விளையாட்டாகும். முல்லை நிலத்து ஆடவா்களின் ஆண்மைத்திறப் புலப்பாடாக அமைந்த இந்த விளையாட்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நில மக்கள் வழங்கிய கொடையாகவே கருத வேண்டும். இந்த ஏறுதழுவுதல் விளையாட்டானது அன்றைய பதிவுகளின் நீட்சியாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இந்நிகழ்வு ஏறுகோடல், ஏறு தழுவுதல், ஏறுகோள், ஏறு விடுதல் என்னும் பெயா்களில் முல்லைக் கலியிலும், இக்காலத்தில் சல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடித்தல், கூளிபிடித்தல், கூளியாடுதல் என்னும் பெயா்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஏறுதழுலுதல் குறித்துக் கலித்தொகையில் முல்லைக்கலி பாடல்கள் புலப்படுத்துவனவற்றை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.
முல்லைக் கலியில் ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதலாவது வலிமைமிக்க ஏற்றைத் தழுவியடக்குதல் எனும் பொருளைப் புலப்படுத்துகினறது. ஏறுகோடல், ஏறுகோள் என்பனவும் அதே பொருளை உணா்த்துகின்றன.1
ஆவினங்களையே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லை நிலச் சமுதாயத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் அவ் ஆவினங்களை முன்நிறுத்தியே மேற்கொள்ளப் பட்டுள்ளமை அறியற்பாலது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில் முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவுதலைப் பற்றியே பேசுகின்றன. ஆறாவது பாடல் தவிர மற்ற பாடல்கள் தொழுவத்தில் நிகழும் ஏறு தழுவுதலைப் பற்றியும் , ஆறாம் பாடல் வியன்புலம் என்று சொல்லப் படுகின்ற மேய்ச்சல் நிலத்தில் தற்செயலாக நிகழும் ஏறுதழுவுதல் பற்றியும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இரண்டு வகையான ஏறுதழுவுதல்கள் குறித்த செய்திகள் முல்லைக் கலியில் இடம் பெற்றுள்ளன.
ஆயர்தம் குலமரபு
கொல்லும் தன்மையுடைய ஏற்றினைத் தழுவியடக்கும் ஆயர்குல வீர மறவனே, அக்குலத்தில் பிறந்த கற்புடைய மங்கையை மணக்கத் தகுதியானவன் எனும் மரபார்ந்த வழக்கத்தையுடையவா்கள் ஆயர்கள். அவ்வழக்கப்படி ஆயர் குலத்தில் ஒரு பெண் பிறந்தவுடனேயே தம் தொழுவத்தில் ஒரு ஆனேற்றுக் கன்றையும் வளா்க்கத் தொடங்குவா். அவளுக்குரிய அவ்வேற்றினை அடக்கியே அவளை மணக்க விரும்புவோர் மணக்க முடியும்.