ஒரு வழக்காற்றைத்தான் மரபு என்ற சொற்பதத்தால் பெரிதும் குறிப்பிடப்படுகின்றது. வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. வழமையாக ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டில் இருந்து வந்த ஓரின, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள், சமயத்தைப் பின்பற்றும் மக்களால் மேற்கொள்ளப்படும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டுவந்த அதேமுறையில் பின்பற்றப்படுமானால் அதனை ‘வழக்காற்று முறை’ என்று குறிப்பிடலாம்.
எனவே பண்பாட்டையும் வழக்காற்றையும் தனித்தனியாகப் பிரித்துவிடமுடியாது. வழக்காறு அல்லது மரபு என்பது மக்கள் வாழ்வியலைக் குறித்து நிற்பதாகும். மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் முறைமை மரபுகளைப் பின்பற்றி வாழுவதாகக் கொள்ளலாம். வழக்காறு அல்லது மரபு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Custom’ என்ற பதம் அல்லது ‘Tradition’ என்றப பதம் பயன்படுத்தப்படுகின்றது. Custom can also mean changed to suit better: altered in order to fit somebody’s requirements. வழக்காறு என்பது ஒன்றிற்குப் பொருந்தும் வகையில் மாற்றப்படக்கூடியது என்ற பொருளையும் நடைமுறையையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. வழக்காறுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்ல காலும், நேரம், இடம் கருதி மாற்றம் பெற்றே வருகின்றன என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வழக்காறுகள் அல்லது மரபுகள் மாற்றம் பெறுகின்றன என்றால் புதிய அல்லது வேறுமரபுகள் வந்து சேருகின்றன என்பது பொருளாக அமைகின்றன. எனவே நடைமுறையில் இருந்துவந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் நடைமுறியில் இருந்து விலகிப்போவதனைத் கட்டி இழுத்துப பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை. பண்டய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, சாதிய மரபு முறைகள் எம்மத்தியில் இருந்து அகற்றப்பட நீண்டகாலப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சியின் பயனாக சாதியத்தைப் பேணும் மரபுகள் மருவி அல்லது அருகி வருகின்றன என்பதனை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பண்டைத் தமிழகத்தில் இருந்த அல்லது பேணப்பட்டுவந்து பழந்தமிழர் மரபுகள் அருகி அல்லது மங்கிப்போனதற்கு அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை சமூகவளர்ச்சியின் காரணமாக இல்லாதொழிந்து போனது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.