அறிமுகம்
பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாடப்பட்ட சந்தர்ப்பம்
சீபர்ப்பதத்தின் பதிக வரலாறு பற்றிக் குறிப்பிடப்படும்போது சுந்தரமூர்த்தி நாயனார் திருக்காளத்தி மலைக்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே ஸ்ரீபர்வதத்துப் பெருமானை நெஞ்சில் நினைத்து அகக்கண்ணாற் கண்டு பாடிய திருப்பதிகமே சீபர்ப்பதமாகும். இத்தலம் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் சேக்கிழாரும் பர்வதம் என வடமொழியில் அழைக்கப்பட்டதை பருப்பதம் என தமிழில் வழங்கியுள்ளனர். ஆனால் சுந்தரரோ ஸ்ரீபர்வதம் என்பதனை சீபர்ப்பதம் என அழைக்கின்றார். இந்தியத்தேசத்தில் இருக்கக்கூடிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பொருமைகளையும் இயற்கை இன்பச்சூழல் நிறைந்த அழகையும் இப்பதிகத்தில் எடுத்துக்காட்டி மக்களை வழிப்படுத்தும் நோக்கில் இப்பதிகம் பாடப்பட்டுள்ளது.
இயற்கை வருணனைகள்
மலைச்சிறப்பு
விலங்குகள், பறவைகள் யாவும் சுதந்திரமாக உலாவித் திரிந்து வாழும் மலை சீபர்ப்பதமலை எனக் கூறப்படுகிறது. விருந்தோம்பும் பண்புடைய குறமாந்தர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழுகின்றவர்கள் என்பதற்கு உதாரணமாக யானைக்குலமே மனிதர்களுக்குரிய மானத்துடனும் பண்புகளுடனும் வாழும் மலையாக “பொலி சீபர்ப்பத மலையே” என்ற சொற்றொடரின் ஊடாக வளம்நிறைந்த மலைப்பிரதேசமாகச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முப்புரங்களை எரித்த சிவபெருமான் விரும்பி உறைந்துள்ள புராண வரலாற்றையும் இயற்கையில் இறைவனைக் காணும் அழகினையும்
“மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப் பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.”
என்ற பதிகத்தில் சுந்தரர் அழகாகக் காட்டுவார். மானினமும் மரையினமும் மயிலினமும் தாமாகத் திரிந்து மேய்ந்து சுனைகளில் உள்ள நீரைப்பருகி மரங்களிலே தம் உடலை உராய்ந்து பொழில்கள் ஊடாகச் சென்று இனிய தேமாமரங்கள் நிறைந்த சோலையிலே துயில் கொள்ளுகின்ற காட்சியை மேற்படி விபரிக்கிறார். இவ்வாறான இயற்கை அழகு நிறைந்த மலையிலே இறைவன் வீற்றிருந்து அருள் பொழிகின்ற அழகு சீபர்ப்பதத்தில் மிக எளிமைநிறைந்த இன்தமிழில் பாடப்பட்டுள்ளது.