மனக்குறள் 13, 14& 15

மனக்குறள் 9 & 10

மனக்குறள்13: முள்ளிப் பத்தாண்டு-நீளும் நினைவு! (2009-2019)

ஈர நினைவுகள் இன்னும் அலைத்திடும்
பார நிலத்துப் படர்!

முள்ளிவாய்க் கால்முகம் மூட்டி அழித்தவை
அள்ளிவரும் நெஞ்சின்; அலை !

பிள்ளையோ பாலுக் கிரங்கி யழுகையில்
கொள்ளி விழுங்கியதே கூடு

தன்னைக் கொடுத்துத் தரணிக் கெழுதினன்
மன்னும் நிலத்து மகன்!

ஆயிர மாயிரம் அற்புத நெஞ்சமாய்
தாய்மை துடித்த தணல்!

கண்முன் கரைந்து கனவிழி நீரொடும்
அன்னை யறைந்தாள் அறம்!

வெள்ளைக் கொடியென்றும் மீட்பர் எனநின்றும்
சொல்லி யழித்தார் சிறியர்!

ஏமாற்றிக் குள்ளர் இணைந்து வரலாற்றின்
கோமாளி யானார் கொழுத்தி!

கொல்லும் படிக்கே குதர்க்க வழிகாட்டிச்
செல்லும் படியிட்டார் சேர!

ஆண்டு கரைந்தாலும் அள்ளும் கொடும்போரின்

நீண்டுகொண்டே போகும் நினைவு !

Continue Reading →

எழுத்தாளர் உதயணன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

எழுத்தாளர் உதயணன்எழுத்தாளர் உதயணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். அவர் தனது கடைசிக் காலத்தைக் கனடாவில் செலவிட்டபோது தன்னால் இயன்ற அளவு கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்றே குறிப்பிட வேண்டும். கனடா எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போதுதான் உதயணன் என்ற புனைபெயரைக் கொண்ட எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் எனக்கு அறிமுகமானார். பின்லாந்தில் இருந்து கனடாவுக்கு ஒருமுறை அவர் வருகை தந்தபோது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற் கூடாகத் தனது நூல் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதிக கவனம் செலுத்துவதால், அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது நூலை இங்குள்ள ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அதன்பின் சமீப காலங்களில் இலக்கிய நிகழ்வுகளிலும், தாய்வீடு பத்திரிகையின் ஒன்றுகூடல்களின் போதும் அடிக்கடி சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன்.

இவரது ஆக்கங்கள் பல இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது நாவல்களில் ஒன்றான ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவலை வீரகேசரி பிரசுரம் அப்போது வெளியிட்டிருந்தது. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்து இவர், நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து, பின்லாந்திற்குப் புலம்பெயர்ந்தார். சுமார் 25 வருடங்கள் வரை பின்லாந்தில் வசித்தபோதும் தாய் மொழியை மறக்காது, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராகவும், பகுதி நேர தமிழ்மொழி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர், பின்லாந்தின் தேசிய காவியமான ‘கலேவலா’ என்ற நூலை 1994 ஆம் ஆண்டு பின்னிஷ் மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு  மொழி மாற்றம் செய்திருந்தார்.  இதன்பின் கனடா நாட்டிற்கு வந்து தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். கடைசி காலத்தைத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயே செலவிட்டார். சமீபத்தில் இவர் ‘பிரிந்தவர் பேசினால்’, ‘உங்கள் தீர்ப்பு என்ன?’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும் என்பதில் ஐயமில்லை.

Continue Reading →

எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம்: “என் நெஞ்சில் நீங்காது நிலைபெற்றிருக்கும் ஆசான்!

கலாநிதி நா. சுப்பிரமணியன்

– அண்மையில் முகநூலிலும், பதிவுகள் இணைய இதழிலும் எழுத்தாளர் அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாக பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். – வ.ந.கிரிதரன் –


அன்ப!  எனது  ஆசிரியப்பெருந்தகை அப்பச்சி மகாலிங்கம்  அவர்கள்  தொடர்பான தங்களது  பதிவையும் அத்துடனமைந்த முகநூற்பதிவுகளையும்  (20-07-2019) பார்த்து மிக மகிழ்ந்தேன். திரு. அப்பச்சி மகாலிங்கம்  அவர்கள். ஏறத்தாழ1955-1964) காலகட்டத்தில்முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் ஆசிரியராகப்  பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் அவரிடம் பயிலும் வாய்ப்புப் பெற்ற பலருள் நானும் ஒருவன். .  எனக்குப் பல்கலை கழகம் செல்வதற்கான பாதையை அமைத்தளித்த பேராசான்கள் மூவரில்  அவரும் ஒருவர். அவருடனிணைந்து என்னை இலங்கைப்  பல்கலைக்கழகத்தை நோக்கி  வழிநடத்திய   . ஏனைய இருவருள் ஒருவர்   வித்துவான் த. செல்லத்துரை. இவர்   அளவெட்டியச் சார்ந்தவர்.இன்னொருவர்  எனது ஊரான முள்ளியவலையைச்சேர்ந்தவரான முல்லைமணி வே. சுப்பிரமணியன் அவர்கள்.

வித்தியானந்தக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் சித்தியெய்தியபின்னர்  ஊர்ச் சூழலில் புரோஹிதனாகவும்   கோயில் பூசனாகவும்  பணியாற்றிக்கொண்டிருந்த என்னை     மீண்டும் வித்தியானந்தக்கல்லூரிக்கு அழைத்து , என்னை முன்னிறுத்திக் க. பொ.த. உயர்தரவகுப்பை உருவாக்கிக் கற்பித்தவர்கள்,அவர்கள். இம்மூவரும்  வித்தியானந்தாக் கல்லூரியில் அக்காலப்பகுதியில் பணியாற்றியிராவிட்டல் நான் பல்கலைகழகக் கல்வியைப் பற்றியோ தமிழியல் ஆய்வில் கால் பதிப்பது பற்றியோ கற்பனைகூடச் செய்திருக்கமுடியாது.  அதனால் என்னுடைய நேர்காணல்கள் மற்றும் சுயவரலாற்றுப்பதிவுகள் ஆகியவற்றில்  எனது வழிகாட்டிகளகிய  மேற்படி மூவரையும் நான் தவறாது நன்றியுணர்வுடன்  நினைவுகூர்ந்துவருகிறேன்.

ஒரு ஆசிரியர் என்றவகையிலே அப்பச்சி மகாலிங்கம்  அவர்கள் சிறந்தவொரு வழிகாட்டியாவார். தான் கற்றறிந்தவற்றை மாணவர்களுக்கு முழுவதுமாக அள்ளிவழங்கும் ஒரு அறிவு வள்ளலாகவே   திகழ்ந்தவர், அவர். இலக்கியம், வரலாறு , அரசறிவியல்,பண்பாடு முதலான பல பாடத்துறைகளிலும் தனது பார்வைகளை விரிவுபடுத்திநின்ற அப்பெருமகன் வகுப்புக்கு வரும் ஒவ்வொரு நாளிலும்  அறிவுசார் புதிய தகவல்களுடன் வருவார். அவரிடம்  பாடங்கேட்பதே ஒரு சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து வகுப்புகளுக்குச்சென்று படித்த நாள்கள் எனது நினைவுகளில் மீள்கின்றன.

Continue Reading →