– அண்மையில் முகநூலிலும், பதிவுகள் இணைய இதழிலும் எழுத்தாளர் அமரர் அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் பற்றியொரு குறிப்பினையிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாக பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். – வ.ந.கிரிதரன் –
அன்ப! எனது ஆசிரியப்பெருந்தகை அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் தொடர்பான தங்களது பதிவையும் அத்துடனமைந்த முகநூற்பதிவுகளையும் (20-07-2019) பார்த்து மிக மகிழ்ந்தேன். திரு. அப்பச்சி மகாலிங்கம் அவர்கள். ஏறத்தாழ1955-1964) காலகட்டத்தில்முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் அவரிடம் பயிலும் வாய்ப்புப் பெற்ற பலருள் நானும் ஒருவன். . எனக்குப் பல்கலை கழகம் செல்வதற்கான பாதையை அமைத்தளித்த பேராசான்கள் மூவரில் அவரும் ஒருவர். அவருடனிணைந்து என்னை இலங்கைப் பல்கலைக்கழகத்தை நோக்கி வழிநடத்திய . ஏனைய இருவருள் ஒருவர் வித்துவான் த. செல்லத்துரை. இவர் அளவெட்டியச் சார்ந்தவர்.இன்னொருவர் எனது ஊரான முள்ளியவலையைச்சேர்ந்தவரான முல்லைமணி வே. சுப்பிரமணியன் அவர்கள்.
வித்தியானந்தக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் சித்தியெய்தியபின்னர் ஊர்ச் சூழலில் புரோஹிதனாகவும் கோயில் பூசனாகவும் பணியாற்றிக்கொண்டிருந்த என்னை மீண்டும் வித்தியானந்தக்கல்லூரிக்கு அழைத்து , என்னை முன்னிறுத்திக் க. பொ.த. உயர்தரவகுப்பை உருவாக்கிக் கற்பித்தவர்கள்,அவர்கள். இம்மூவரும் வித்தியானந்தாக் கல்லூரியில் அக்காலப்பகுதியில் பணியாற்றியிராவிட்டல் நான் பல்கலைகழகக் கல்வியைப் பற்றியோ தமிழியல் ஆய்வில் கால் பதிப்பது பற்றியோ கற்பனைகூடச் செய்திருக்கமுடியாது. அதனால் என்னுடைய நேர்காணல்கள் மற்றும் சுயவரலாற்றுப்பதிவுகள் ஆகியவற்றில் எனது வழிகாட்டிகளகிய மேற்படி மூவரையும் நான் தவறாது நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்துவருகிறேன்.
ஒரு ஆசிரியர் என்றவகையிலே அப்பச்சி மகாலிங்கம் அவர்கள் சிறந்தவொரு வழிகாட்டியாவார். தான் கற்றறிந்தவற்றை மாணவர்களுக்கு முழுவதுமாக அள்ளிவழங்கும் ஒரு அறிவு வள்ளலாகவே திகழ்ந்தவர், அவர். இலக்கியம், வரலாறு , அரசறிவியல்,பண்பாடு முதலான பல பாடத்துறைகளிலும் தனது பார்வைகளை விரிவுபடுத்திநின்ற அப்பெருமகன் வகுப்புக்கு வரும் ஒவ்வொரு நாளிலும் அறிவுசார் புதிய தகவல்களுடன் வருவார். அவரிடம் பாடங்கேட்பதே ஒரு சுவையான அனுபவம். அந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து வகுப்புகளுக்குச்சென்று படித்த நாள்கள் எனது நினைவுகளில் மீள்கின்றன.