கவிஞர் எம்.ஏ.ஷகியின் கவித்துவத்திற்கு நாம் செய்யவேண்டிய பதில்மரியாதை.

கவிஞர் எம்.ஏ.ஷகி

முகநூல் மூலம் அறிமுகமான சக கவிஞர் எம்.ஏ.ஷகி. சில வருடங்களாகவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு காலமானார் என்ற செய்தியை முகநூல் வழியே தெரிந்துகொள்ள நேர்ந்தது ஒரு கையறுநிலையில் மனதை அவலமாக உணரவைத்தது. வளமற்ற குடும்பச் சூழலும் மூன்று குழந்தைகளைத் தன்னந்தனியே பராமரிக்கவேண்டிய கட்டாயமும் அவருடைய கவித்துவ வீச்சை எந்தவிதத்திலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை என்பதை அவர் கவிதைகளை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

அவரைப் பற்றி சக கவிஞர் நஸ்புல்லாஹ். ஏ தன் முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“June 27 at 9:45 AM ·
நேற்று ஸகியின் ஜனாஷாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.அவரது மூன்றாவது மகள் என் அருகில் வந்து “எப்ப வந்திங்க”என கேட்டாள் அவளது மழலை முகதில் அப்பிக்கிடந்த சோகங்கள் என் நரம்புகள் எங்கும் பாய்ந்து பெரும் ரணத்தைத் தந்தது.ஜனாஷா அடக்கத்தின் போது அவரது மகன் அழுது கண்ணீர் வடித்தான்.இன்று ஷகியின் மூத்த மகள் சஷ்னாவை பஸ்ஸில் சந்தித்து எனது இருக்கையை அவளுக்கு கொடுத்தேன்.அவளும் பெரும் துயரத்தில் இருக்கிறாள் ஸகி தன் குழந்தைகளுடன் ஒரு தோழியாக பழகியதை நான் அறிவேன்.எனினும் ஸகி தன் குழந்தைகளுக்காக தூய அன்பைத் தவிர எதனையும் சேமித்து வைக்கவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.”

’சிறு துளி பெருவெள்ளம்’. சின்ன வெள்ளம் என்ற அளவிலாவது கவிஞர் ஷகியின் பிள்ளைகளுக்கென முகநூல் நட்பினராகிய நாம் நம்மால் முடிந்த அளவு நிதி திரட்டித் தரலாமே. செய்யவேண்டிய காலத்தில் செய்யும் உதவி எத்தனை சிறிதானாலும் ஞாலத்தைவிட மிகப் பெரிதல்லவா? இவ்வாறு செய்யும் நிதியுதவி நம் சக மனிதரும், சக கவியுமான ஷகிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக, காட்டும் மனமார்ந்த மரியாதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கே முகநூலில் நான் அவ்வப்போது படித்து ரசித்த கவிஞர் எம்.ஏ.ஷகியின் அருமையான கவிதைகள் சில, என் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு தரப்பட்டுள்ளது.
உங்கள் கவித்துவத்தை சாவு காவு வாங்கவியலாது. தோழி. சென்று வாருங்கள்.

Continue Reading →