நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனுடன் இன்று மாலை சிறிது நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவலான ‘மேகலை கதா’ என்பது பற்றிக் குறிப்பிட்டார். அது பற்றிய குறிப்பொன்றினையும் தனது வலைப்பூவிலும் , முகநூலிலும் வெளியிட்டிருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ்க்காப்பியங்களில் எனக்குச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகவும் பிடித்தவை. குறிப்பாக மாதவி , மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் எனக்குப்பிடித்த பெண் பாத்திரங்கள். இவர்களிலும் மணிமேகலை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்த பாத்திரமென்பேன்.
சாத்தனாரின் ‘மணிமேகலை’யைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்தபோது அக்காவியம் முழுவதும் தத்துவத்தர்க்கங்களால் நிறைந்திருந்ததை அவதானித்தேன். ஆச்சரியமாகவிருந்தது. அறிவுத்தாகமெடுத்து அலையும் எனக்குக் குடிப்பதற்கு நிறையத் தண்ணீரை உள்ளடக்கிய காப்பியம் மணிமேகலை.
மணிமேகலையை மையமாக வைத்துத் தமிழ்த்திரைப்படங்கள் பல வெளியாகியுள்ளன. டி.ஆர்.மகாலிங்கம், பி.பானுமதி நடிப்பில் ‘மணிமேகலை’ என்னுமொரு தமிழ்த்திரைப்படம் வெளியாகியுள்ளது. அண்மையில் கூடச் சிங்களப்படமான ‘பத்தினி’யில் மணிமேகலையின் பிறப்பு , இளம் பருவத்துக் காட்சிகள் உள்வாங்கப்பட்டிருந்தன.
மணிமேகலையை மையமாக வைத்து யாராவது நாவலொன்றினை எழுத மாட்டார்களா என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்குறையை விரைவில் தேவகாந்தன் அவர்கள் தீர்க்கவிருப்பது மகிழ்ச்சியளிப்பது. நாவல் தொடராக வெளிவரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பவர்களீல் நானும் ஒருவன். வாழ்த்துகள் தேவகாந்தன்.
எழுத்தாளர் தேவகாந்தன் தனது அடுத்த நாவலான ‘மேகலை கதா’ பற்றிய குறிப்பொன்றினை அவரது வலைப்பதிவினில் வெளியிட்டுள்ளார். அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
‘மேகலை கதா’பற்றிய ஓர் அறிவிப்பு! – தேவகாந்தன் –
புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன்.
புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத் தொடங்க தீர்மானித்தேன்.
அது அத்தனை சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்காக என்னை நான் நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்தது. அதனால் மறுபடியும் ‘மணிமேகலை’க்குள் புகுந்தேன். இந்திரவிழாவும், கண்ணகி- கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீள படிக்கவும் நேர்ந்தது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகும் இடைஞ்சல் இருந்தது.
பௌத்த தத்துவத்தை ஆழப் புரிந்துகொள்ளல் அத்தனை சுலபத்தில் கைகூடவில்லை. அது ஒரு நூலிழை தவறினாலும் பிற மத தத்துவங்களோடு, குறிப்பாக சமண மதத்தோடும், இந்து மதத்தோடும் ஊடாட்டம் கொள்வதாய் இருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தின் சமய நிலை, அவரது போதனைகளை பிற்காலத்தில் எழுதியோரது மனநிலையென இந்த உராய்தலுக்கான காரணங்களை விளங்க முயன்றேன். ஆயினும் நண்பர்களுடன் உரையாடினேன். ஆய்வு நூல்களை மேலும் விளக்கம் பெறும்வரை கற்றேன். ஒரு தெளிவு பிறந்ததான நம்பிக்கை வந்தது.
Continue Reading →
முன்னுரை:
குற்றங்கள் அதிகமாகும் காலத்திலேயே அறம் சார்ந்த கருத்துகளை போதிக்க நூல்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத வெண்பாக்களால் அமைந்த பதினெட்டு நூல்கள் எடுத்தியம்பின. அவற்றை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவிய நூல்கள் என்றும் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் பொய்யாத மொழியாகிய திருக்குறளோடு கருத்தாலும் பொருளாலும் ஒன்றுபடும் உலக வசனம் என்ற சிறப்பிற்குரிய பழமொழி நூலின் பாடல்கள் ஆய்வு பொருளகின்றன.
கற்றவன் அடையும் சிறப்பு:
கல்வியின் சிறப்பை மனத்தில் கொண்ட மூன்றுரையரையரும் திருவள்ளுவரும் முறையே தாங்கள் இயற்றிய நூலான பழமொழியில் முதல் பத்து (1-10) பாடல்களாலும் திருக்குறளில் 40ஆம் அதிகாரத்தில் பத்து (391-400) குறட்பாக்களாலும் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வியை முறையாகக் கற்றுத்தேர்ந்தவன், தனது நாட்டை விட்டகன்று வேறு நாட்டுக்குச் சென்றாலும், அவனது அறிவுத்திறனைக் கண்டு யாவரும் சிறப்பு செய்து உண்வளிப்பதால் சொந்த நாட்டிலிருப்பதாகவே எண்ணுவான் என்பதை,
“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.” (பழமொழி நானூறு. 04)
என்ற பாவரிகளால் கற்றவன் அடையும் சிறப்பைக் கூறுகிறார்.
சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்கு சொந்தக்காரரான வள்ளுவர், கற்றவன் அடையும் சிறப்புகளை தனது தமிழ்மறையில்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (திருக்குறள். 397)
என்னும் குறட்பா வாயிலாக கல்வி கற்றவனுக்கு எல்லா நாடுகளுமே சொந்த நாடாகும் என்ற உயர்ந்த கருத்தை எடுத்தியம்புகிறார்.
Continue Reading →
என் சகோதரன் எழுத்தாளர் பாலமுரளி (கடல்புத்திரன்) – காஞ்சனா தம்பதியினரின் புத்திரி செல்வி துளசி பாலமுரளி 8.7.2019 அன்று தனது இருபத்து மூன்றாவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கினார். மருத்துவரின் கவனக்குறைவினால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட துளசி இதுநாள் வரை இருப்புக்கான தனது போராட்டத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு வந்தார். தனக்குரியதோர் உலகினில் வாழ்ந்தபோதினும் சுற்றியிருந்த அனைவருக்கும் இன்பத்தையே தந்து வந்தார். அவ்வப்போது புன்னகை மலர அனைவரையும் நோக்கும் துளசியின் முகம் நினைவிலென்றும் நிழலாடும். தன்னால் முடிந்தவரை இருப்புக்காகப் போராடிய துளசி பற்றிய நினைவுகள் அனைவர்தம் நெஞ்சங்களிலும் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.
இவரது ஈமச்சடங்குகள் Highland Funeral Home – Scarborough Chapel இல் ஜூலை 11, 2019 காலை நடைபெற்றன. பின்னர் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு, St. John’s Norway, 256 Kingston Rd., Toronto ON M4L 1S7 என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இது பற்றிய விரிவான விபரங்களுக்கு: https://www.arbormemorial.ca/highland-scarborough/obituaries/miss-thulasi-balamuraly/36225/ துளசி பாலமுரளியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. முகநூலில் இது பற்றிய தகவலறிந்து தமது அஞ்சலியினைத் தெரிவித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
–செல்வி துளசி பாலமுரளியின் பிரிவை எண்ணிக் கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் எழுதிய அஞ்சலிக் கவிதை . –
துளசி மீண்டும் வரமாட்டாளா?
– தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் –
மலர்தலை உலகம் மன்பதை சிறக்கும்
வளர்கலை அறிவம் வையகம் ஆக்கும்
புலர்பொழு தொன்றில் பூத்திட நின்ற
மலர்மகள் துளசி மலர்ந்திடக் கண்டோம்!
எழுத்துல கத்தொடும் இயம்பிடும் மானுடம்
பழுத்தவோர் மடியினிற் பாங்கினள் ஆயினும்
வழுத்திய மான்மகள் வைத்தியம் வதையுற
அழுத்திய தாம்பிழை ஆக்கினர் என்பதும்
Continue Reading →
– ‘பதிவுகள்’ இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன், வெங்கட் சாமிநாதன் , லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். –
From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. “genom” சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். ‘வலை விரித்தேன்’. ‘பதிவுகள்’ கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. ‘பதிவுகள்’ தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்
Continue Reading →
(*கவிஞர் மொழிபெயர்ப்பாளர், சிறுபத்திரிகையாளரான ஸ்ரீபதி பத்மநாபா சமீபத்தில் காலமானார். அவருடைய குடும்பத்திற்கு உதவும்படி கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து முன்வைக்கும் வேண்டுகோள் கீழே தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் இலக்கியப் பங்களிப்புக்கு நாம் செய்யும் பதில் மரியாதையாக அவருடைய குடும்பத்திற்கு முடிந்த நிதியுதவி செய்ய முன்வருவோம் – லதா ராமகிருஷ்ணன்)
—
அன்பின் நண்பர்களுக்கு,
வணக்கம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. ’மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் உறவோ’ என்ற சு.ராவின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஒரு படைப்பாளியாக ஸ்ரீபதி நிகழாது போன அற்புதம். ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீபதியின் அறிவுக்கு அவர் எழுதியவை குறைவு. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இனி அதைப் பேசுவதில் பலனில்லை.
வாழ்வெனும் இப்பெருங்கனவை விட்டுச் செல்கிறவர்கள் ஒருவழியாக நிம்மதியாகப் போய்விடுகிறார்கள். ஆனால், அந்தப் பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு மனைவி என்றும் குழந்தை என்றும் வாய்க்க நேர்ந்த எளியவர்கள் நிலைதான் பரிதாபம். ஊழின் கொடுங்கரங்களில் இரக்கமற்று வழங்கப்படும் அந்த எளிய ஜீவன்களை காலம் போல் கருணையற்று நாமும் பார்த்துக்கொண்டிருக்க இயலாது அல்லவா? ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார்.
நன்கு படிக்கும் பெண்ணான பாரதி அன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார்.
இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.
கடந்த சனிக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் இதுவரை நூலாக்கம் பெறாத ஸ்ரீபதியின் படைப்புகளை அச்சாக்குவது மற்றும் ஸ்ரீபதியின் குடும்பத்துக்கு உதவுவது என்ற இரு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வேலைகளை எப்படித் திட்டமிட்டு முடிப்பது யார் யாரிடம் எல்லாம் உதவிகள் கேட்பது என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
நண்பர்கள் இந்த பதிவையே அழைப்பாக ஏற்று, இது தொடர்பான கருத்துகளைப் பதிவிடவும்… மேலும், ஸ்ரீபதிக்கான உதவித் தொகை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விரைவில் ஒரு தேதியில் ஸ்ரீபதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்றும் நண்பர்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பான வரவு செலவு விவரங்களை ஸ்ரீபதி குடும்பத்திடம் நிதி ஒப்படைத்த பிறகு, உடனடியாக தேதி வாரியாக வழங்கியவர்கள் பெயர் உட்பட இங்கு விரிவாகப் பதிகிறோம். ஸ்ரீபதி குடும்பத்துக்கு உதவ வேண்டியது நமது கடமை. நண்பர்கள் ஸ்ரீபதி மேலும் இலக்கியத்தில் மேலும் தங்களுக்கு உள்ள அன்பை தாராளமாகக் காட்டுங்கள்.
Continue Reading →