காலத்தால் அழியாத கானங்கள் : “வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்”

" வா என்றது உருவம். நீ போ என்றது நாணம்'

மானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : ” காத்திருந்த கண்கள்”

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள் : “பக்கத்து வீட்டுப்பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்”

“ஊரெல்லாம் உறங்கிவிடும் உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும். ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நினைத்திருப்பேன்.” – கவிஞர் வாலி –

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் வாலியின் பாடல் ‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்’. பி.சுசீலாவின் உயிரோட்டமான குரலில், நடிகையர் திலகம் சாவித்திரியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமான நடிப்பில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையரின் உயிரோட்டமான இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத இன்னுமொரு கானம். இப்பாடலும் காதல் வயப்பட்ட உள்ளத்துணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும்  பாடல்.

Continue Reading →

சிறுகதை: விசுவாசம்

ஶ்ரீராம் விக்னேஷ்“ நாட்டில  நடக்கிற  தப்புகளையெல்லாம்  என்னால  முடிஞ்சவரைக்கும்   தடுக்கணும்….  சம்மந்தப்பட்டவங்களைப்  புடிச்சு  சட்டத்துக்கு  முன்னால  நிக்கவெச்சுத்  தண்டிக்கணும்….  இந்த  ஒரே  நோக்கத்துக்காகத்தான்  நான்  இந்தப்  போலீஸ்  வேலையை  விரும்புறேனே  தவிர,  வேற  எந்த  நோக்கமும்  எனக்குக்  கிடையாது  ஐயா….”  பணிவோடு  பேசினேன்  நான்.

என்  பேச்சுக்குள்  பொதிந்து  கிடந்த  கம்பீரத்தையும், எதிர்காலத்தில்  ஒளிவிட்டுப்  பிரகாசிக்கப்  போவதுபோல,  அதன்மேல்  தெரிந்த  களையையும்,  அன்பழகன்  ஐயா  உள்ளூர  எடைபோடுவதை  என்னால்  உணர  முடிகின்றது.
அறுபது  வயதைக்  கடந்துவிட்டபோதும்,  இன்னமும்  துடியாட்டமாய்  செயல்படும்  அன்பழகன்  ஐயா  முகத்திலே  இலேசானதோர்  புன்னகை  தெரிந்தது.

“இந்த  பாருப்பா….  என் வயசில  பாதிக்கும்  கம்மியானவன்  நீ….  அத்தோட  ஒலகத்தைப்பத்தி  எம்புட்டு  தெரிஞ்சுகிட்டிருக்கியோ  எனக்கு  தெரியாது….  கடமை, நேர்மை  அப்பிடி  இப்பிடீன்னு  சொல்லிக்கிட்டு,  இந்த  உத்தியோகத்துக்கு  போறவங்க  ரொம்பப்பேரு,  நாளைக்கு  நாலு  காசைக்  காணுறப்போ,  கையை  அழுக்கு  ஆக்கிடுராங்க….  நீ  அப்பிடிச் செய்வேன்னு  நான்  சொல்ல  வரல்ல….  நீயா  விரும்பாவிட்டாலும்,  நீ  இருக்கக்கூடிய  சூழ்நிலை  உன்னய  செய்ய வெச்சிடும்….”

சூழ்நிலையின்  நிதர்சனத்தை  எண்ணி  நொந்தபடி  பேசினார். 

“ ஐயா…. நீங்க  சொல்றது  எனக்குப்  புரியாமலில்லை….  அதே டயிம்  அடுத்தவங்க  கடமையில  நான்  குறுக்கை  போகப்போறதும்  இல்லை….  என்  கடமையில  யாரையும்  கிராஸ்பண்ண  விடப்போறதும்  இல்லை….  மிஞ்சிப்போனா  என்ன  பண்ணிடுவாங்க….  தண்ணியில்லாத  காட்டுக்கு  மாத்திப்புடுவோம்னு  மெரட்டுவாங்க….  மாத்திட்டுப்  போகட்டுமே….  அதுக்குமேல  என்ன  பண்ணுவாங்க….  வெசத்தையா  வெச்சுடுவாங்க….  அப்பிடீன்னாலும்  பரவாயில்ல….”

என்  பேச்சிலே  தெரிந்த  உறுதி, அன்பழகன்  ஐயாவை  சிறிது  அதிர வைத்தது. தொடர்ந்து  அவரது  பேச்சிலே  சிறிது  கோபம்  தெரிந்தது.

“ஏ….  என்னப்பா  பேசுறே….  கொஞ்சம்  நல்ல  வார்த்தையாய்  பேசுப்பா….”

நான்  தொடர்ந்தேன்.

Continue Reading →

பிற மொழிகளிலிருந்து தரமான கதை, கவிதை முதலான இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு தேவையோ அதேயளவு முக்கியம் தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளில் – குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப் படுவது.

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.

கவிதைகளை மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக அவர் கூறுவார். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொகுப்பில் இடம்பெற செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதுவதும், தொகுப்பு வெளியானதும் For the Joy of Sharing என்று அன்போடு உற்சாகமாக எழுதி  கையெழுத்திட்டு தொகுப்பில் இடம்பெறும் அத்தனை கவிஞர்களுக்கும் தன் செலவில் தொகுப்புகளை வாங்கி அனுப்பிவைப்பதும் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியனுக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.

அப்படி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தொகுப்புக்காகத் தேடித் தேர்ந்தெடுத்து உரிய கவிஞர்களிடம் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவது பல்வேறு காரணங்களால்  தாமதமாகி இன்று அந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு ன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது என்னுடைய cottage industry publishing house – ANAAMIKAA ALPHABETSக்குக் கிடைத்திருக்கிறது! அதற்காக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களுக்கும் தன் நட்பினருக்கும் தன் செலவிலேயே நூலின் பிரதியை அனுப்பிவைப்பது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் வழக்கம். எனவே குறைந்தபட்சம் 150 பிரதிகளாவது அவர் விலை கொடுத்து வாங்கிவிடுவார் என்பதால் அச்சகத்தாருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிட முடியும் என்பது நிம்மதியளிக்கும் விஷயம்!

நூலை சிறப்பாக வடிவமைத்துக்கொடுத்திருக்கும் தோழர் திருவுக்கும்(தோழர் முனியரசு) என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலின் விலை ரூ.200. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் விலைக்குக் கிடைக்கும்.  No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai – 600005, Opp to Rathna Café. தொலைபேசி 98844 27997
மின் நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

CONTINUUM (A Harvest of Modern Poetry) என்ற தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 100 கவிஞர்களின் 120 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள கவிஞர்கள் – கவிதைகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.

Continue Reading →

‘நம்பிக்கை இன்னும் இருக்கிறது’! புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப்பனைமரம்’ , பா.அ.ஜயகரனின் ‘Insight’ நாடகம் பற்றிய மதிப்பீடுகள்!

கிளைப் பனைமரம்

எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்க முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிற விதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட  இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத்  தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி.

இத் திரைப்படம்  பார்வையாளனுக்கு எதுவுமே இல்லையென்பது நியாயமற்ற கூற்று. ஆனால் அது அடைந்திருக்க வேண்டிய உச்சம் தவிர்ந்திருக்கிறதென்பதும் நிஜம். அப்போதும்கூட முப்பத்தேழு உலக படவிழாக்களில் பங்குபெற்று பன்னிரண்டு விருதுகளை அது பெற்றிருக்கிறதான ஒரு தகவல் கண்டேன். American Filmatic Arts Awards இன் சிறந்த பரீட்சார்த்த பிறநாட்டு திரைப்பட வரிசையில் அந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. நல்லது. இது அவர்களது பார்வை. எனது பார்வை வேறு. ஆயினும் அது நம்பிக்கை தரும் புகலிட திரைப்படமாக இருக்கிறதென்பதையும் இந்த இடத்தில் நான் வலியுறுத்தவேண்டும்.

ஆரம்பத்திலேயே குறைந்தளவு மூலதன வசதியோடு தொடங்கிய இத் திரைப்பட முயற்சியில்  தான் பல தயாரிப்பு இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேர்ந்ததென ரொறன்ரோவில் திரைப்படம் முடிய  இடம்பெற்ற கலந்துரையாடலில் புதியவன் இராசையா  தெரிவித்திருந்ததை நினைத்துக்கொள்ளவேண்டும். அது ஏற்கப்படக் கூடியதுதான். ஆனாலும் மிகக் குறைந்தளவு பட்ஜெட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கி உலகின் சிறந்த சினிமா விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற  திரைப்படங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இத் திரைப்படத்தில்  தவிர்த்திருக்கக்கூடிய பல தவறுகள் போஸ்ற் புரொடக்‌ஷனில்தான் நிகழ்ந்துள்ளன. என் ஆதங்கத்தைக் கிளர்த்துவன அவைதான். குறிப்பாக எழுத்துக்கு முன்பாக வரும் சுமார் ஏழு நிமிஷ கடைசி யுத்தக் காட்சிகள் அவசியமற்றவை. அந்த நிகழ்வுகளை உடனடிப் பின்னால் வரும் காட்சிகள்மூலம் பார்வையாளன் சினிமாவிலிருந்தே உள்வாங்கியிருப்பான்.

தானே தன் சக பெண் போராளியை  அவளின் வேண்டுகோளின்படியே எனினும் சுட்டுக் கொல்லநேரும் அவலம் கதாநாயகியின் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பை அவளது மனது பிளந்தெழும் வேறு பொழுதுகளில் ஒரு பின்னோட்ட துண்டுக் காட்சியாகக் காட்ட நிறையவே வாய்ப்பு இருந்தது. அதன்மூலம் திரைப்படம் மேலும் தன்னை இறுக்கிக்கொள்ள வழி ஏற்பட்டிருக்கும். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் அதைத் தவறவிட்டிருக்கிறார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: முருகபூபதியின் “சொல்லத் தவறிய கதைகள்” இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள்

நூல் அறிமுகம்: முருகபூபதியின்    "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் கான்பரா  யோகன் --நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ  முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து  இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே  அறிந்தவன் நான்.  தொடர்ந்து  அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின்  பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும்  இதழ்களிலும்  நான் வாசித்திருக்கிறேன். 

பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட  அவரது  எழுத்துலக அனுபவங்கள்,   அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச்  சொல்லத் தவறிய கதைகள்  என்ற புனைவு சாரா இலக்கியத்திலும்  இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.    

20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல்  நினைவுகளின் தொகுப்பாக   அல்லது  நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின்  தொகுப்பாக பார்க்கலாம். இதனைப்  பிரசுரித்ததன் மூலம் அவர் தன்  நினைவுச்  சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது,  உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும்  படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.

இனி இந்நூலில் உள்ள  சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில்  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.

முதலாம் அத்தியாயத்தில்  புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய  குறிப்புகளை தந்திருக்கிறார்.  லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட,  அது ஏற்படுத்திய விபரீதங்கள்  அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து  வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.

“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம்  “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக்  கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட,  ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.

Continue Reading →